சீண்டும் பாமக – சீரும் செந்தில் குமார்: பரபரப்பாக்கும் ஊடகங்கள்!

டிரெண்டிங் செய்திகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் சமூக ஊடகங்கள், அப்படி ஒரு செய்தி கிடைத்தால், அதை பயன்படுத்தாமல் விட்டு விடுமா என்ன?

அதிலும் பாமகவுக்கு எதிராக வெளியாகும் செய்திகள் என்றால் கேட்கவே வேண்டாம். வெகு விரைவில் டிரெண்டிங் ஆகும்.

அந்த வகையில், அண்மைக்காலமாக பாமகவுக்கு எதிரான செய்திகள் மற்றும் தகவல்களை வழங்கி, சமூக ஊடகங்களுக்கு சரியான தீனி போட்டுக் கொண்டிருக்கிறார், தர்மபுரி திமுக எம்பி டாக்டர் டி.என்.வி செந்தில் குமார்.

இதற்கான காரணத்தை பற்றியும் யோசிக்க வேண்டியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எப்படியும் வெற்றி பெற்று விடுவார் என்பதே அனைவரின் கணிப்பாக இருந்தது. பாமகவும் அதை முழுமையாக நம்பியது.

வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் அன்புமணி முன்னிலை வகித்தாலும், அடுத்தடுத்த சுற்றுக்களில் பின்தங்கி இறுதியில் தோல்வியை தழுவினார்.

இதை, பாமக இளைஞர்களால் அவ்வளவு எளிதாக ஜீரணிக்க முடியவில்லை. ஒரு ஆறுமாத காலம் பொறுத்திருந்து, செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து, அதன் பின்னால் எம்பி செந்தில் குமாரை விமர்சிக்க ஆரம்பித்து இருக்கலாம்.

ஆனால், தேர்தல் முடிந்த உடனேயே, திமுக எம்பி டாக்டர் செந்தில் குமாருக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள், பாமக இளைஞர்களால் முன்வைக்கப்பட்டன.

சாதாரணமாக தொடங்கிய இந்த முகநூல் யுத்தம், ஒரு கட்டத்தில் டாக்டர் ராமதாசையே விமர்சிக்கும் அளவுக்கு டாக்டர் செந்தில் குமாரை கொண்டு போய் நிறுத்திவிட்டது.

இதனால், டாக்டர் ராமதாசின் அறிக்கைகள், டுவிட்டர் மற்றும் முகநூல் பதிவுகள் என அனைத்துக்கும் எதிர்வினையாற்றி வருகிறார் டாக்டர் செந்தில் குமார்.

இது, பாமக இளைஞர்களை கடுமையாக கோபப்பட வைக்கிறது. பதில்கள் பலவும் விளக்கமாகவோ, விமர்சனமாகவோ இல்லாமல், கோபக் கனல்களாகவே வெளிப்படுகின்றன.

தேர்தலுக்கு முன்னதாக, இதைவிட கடுமையான விமர்சனத்தை, அம்மாவட்ட அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது அன்புமணி ராமதாஸ் முன்வைத்தார். ஆனால், அவரும் தகுந்த பதில் கொடுத்தாலும், பிற்காலத்தில் கூட்டணி வரும் என்பதை உணர்ந்து கொஞ்சம் அடக்கியே வாசித்தார்.

ஆனால், தற்போதைய திமுக எம்பி, தம் மீதான விமர்சனங்களை ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையாகவே கையாண்டார். ஆனால், தற்போது, கடுமையாக எதிர்கொண்டு வருகிறார்.

இந்த விவகாரம், டிரெண்டிங் செய்திகளுக்காக காத்துக் கொண்டிருக்கும்   சமூக ஊடகங்களுக்கு சரியான தீனி போடுவதாக உள்ளது. அதனால், பல சமூக ஊடகங்கள் இவற்றை பரபரப்புக்கு பயன்படுத்திக் கொண்டு வருகின்றன.