மாணவர்கள் அரசியலைப் பார்த்து ஒதுங்கக் கூடாது – கமல்: கமல் கட்சிக்கு ஆட்கள் சேரவில்லையா – அமைச்சர் பாண்டியராஜன்!

 தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் அரசியல் ஆளுமைகள் இல்லாத நிலையில், ஒதுங்கி இருந்த நடிகர்கள் பலரும் அரசியல் பற்றி அடிக்கடி பேச ஆரம்பித்து விட்டனர். அடக்கி வாசித்த அமைச்சர்களும் ஏதாவது பதிலை சொல்லி கேலி செய்வதும், சில நேரம் சர்ச்சைக்கு உள்ளாவதும் தற்போது வாடிக்கையாகி விட்டது.

விஸ்வரூபம் படம் ரிலீஸ் செய்வது பாதிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவை துணிந்து எதிர்கொள்ள முடியாத கமலஹாசன், ஏதாவது ஒரு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட வேண்டியதுதான் என்று உருக்கமாக பேசினார்.

தற்போது, மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய கமல், திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளையும் வரிந்து கட்டி வம்புக்கு இழுப்பதையும் பார்க்க முடிகிறது.

இதன் ஒரு பகுதியாக, லயோலா கல்லூரியில் மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார் கமல். அப்போது பேசிய அவர், கரை வேட்டி கட்டிய அரசியல்வாதிகளை கண்டு மாணவர்கள் ஒதுங்க கூடாது. அரசியல் பேசாமல் கல்வி, விவசாயம் போன்ற எந்த துறையும் முன்னேறாது என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் பாண்டியராஜன், மாணவர்களை பற்றி கமல்ஹாசன் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறார்கள். தேவையான நேரத்தில் அரசியலுக்கு வருவார்கள். கமல் கட்சிக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதற்காக ஒன்றும் செய்ய முடியாது என்றார்.