கூட்டணியில் இருந்து பாஜக விலகலா?: அதிமுக நழுவலா?

டெல்லியை பகைத்துக் கொண்டு முதல்வர் எடப்பாடியாலோ, துணை முதல்வர் பன்னீராலோ தமிழகத்தில் எதுவும் செய்துவிட முடியாது. குறிப்பாக, தமிழக பாஜகவை கை கழுவவும் முடியாது.

ஆனால், நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கு, ஆதரவு அளிப்பது குறித்து, பாஜக தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

தேமுதிக தலைவர், விஜயகாந்தை நேரில் சந்தித்து அமைச்சர்கள், அதிமுகவுக்கு ஆதரவு கோரியது போல, தமிழக பாஜக தலைவர்கள் யாரையும், அதிமுக தலைவர்கள் யாரும் இதுவரை சந்தித்து ஆதரவு கோரவும் இல்லை.

இதனால், அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசலா? அல்லது அதிமுக பாஜகவை விட்டு மெல்ல நழுவுகிறதா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, நாங்குநேரி தொகுதியை பாஜக கேட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், இந்திமொழி குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துக்கள், தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. எனவே, இந்த நேரத்தில் பாஜக போட்டியிடுவது நல்லதாக இருக்காது என்று, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சொல்லி முதல்வர் எடப்பாடி சமாளித்ததாக சொல்லப்பட்டது.

ஆனாலும், தமிழக பாஜக தலைவர்கள், நாங்குநேரியில் பாஜக போட்டியிட வேண்டும் என்று உறுதியாக இருந்தனர். இதை, தமிழக பொறுப்பாளர் முரளீதர ராவிடமும் சொல்லி இருக்கின்றனர்.

ஆனால், அவர் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. அதேசமயம், எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர், முரளீதர ராவை தொடர்பு கொண்டு, கள நிலவரத்தை விளக்கியுள்ளனர்.

அதற்கு, பிரதமருக்கு அனைத்தும் தெரியும். நீங்கள் தொடர்ந்து பணியாற்றுங்கள் என்று பதில் சொன்னதாக கூறப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர்கள் மீது, மோடிக்கு கொஞ்சம் வெறுப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், பாஜகவினரை அதிமுகவினர் மதிப்பதில்லை என்று முரளீதர ராவிடம் இங்குள்ளவர்கள் கூறி இருக்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, சென்னை வந்த மோடியை, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்ததில், அவர் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

எனினும், பாஜக மேலிடம், இடைத்தேர்தலுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இதுவரை எந்த தகவலும் சொல்லவில்லை. அதிமுக தலைவர்களும், பாஜக தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரவில்லை.

இந்த நிலையில்தான், நாங்குநேரி-விக்ரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துக் கொண்டு இருக்கிறது.

மறுபக்கம், அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் ஆதரவையும் கோரவில்லை. அப்படி கோரினால், நாங்குநேரியில் உள்ள மற்றொரு சமூகத்தின் வாக்குகள், தமக்கு கிடைக்காமல் போகும் என்று அதிமுக தலைமை கணக்குப் போட்டு வைத்திருக்கிறது.

இவ்வாறு, கடந்த தேர்தலில் தங்களுடன் கூட்டணியில் இருந்த  இரண்டு முக்கிய கட்சிகளை, பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ஆதரவு கோராமல், அதிமுக தொடர்ந்து இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது.

ஒரு வேளை, அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகுகிறதா? அல்லது, பாஜகவை விட்டு அதிமுக நழுவுகிறதா? என்ற சந்தேகம், தமிழக அரசியலில் பலரை ஆட்கொண்டு வருகிறது.