டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல் நிலைத்தேர்வில் மொழிப்பாடம் நீக்கம்: திமுக எம்பி கனிமொழி கண்டனம்!

டி.என்.பி.எஸ்.சி. குரூப் -2  தேர்வில் புதிய பாடதிட்டத்தின் படி முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது. இதனால் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கு படித்து வந்த தேர்வர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

குரூப்–2, குரூப்–2 ஏ தேர்வு முறைகள், பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் முறைகளில் மாற்றம் செய்து டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது. இந்த முறை, அடுத்து வரும் தேர்வில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி.,கனிமொழி, தமது  டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசு பணியில் சேர்வதற்கே இது வழிவகுக்கும், தமிழ அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என கனிமொழி  வலியுறுத்தியுள்ளார்.