தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்: முதல் பெண் தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வு!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதன் பெண் தலைவராக, திருமதி ரூபா குருநாத், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் பிசிசிஐ தலைவரும், இந்தியா சிமென்ட் ஸ்ரீனிவாசனின் மகளும், குருநாத் மெய்யப்பனின் மனைவியுமாவார்..

இதன் மூலம், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மாநில பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெறுகிறார் ரூபா.

லோதா கமிட்டி பரிந்துரையின்படி, இந்திய கிரிக்கெட் வாரியத்திலும், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்திலும் பல சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன..இந்த புதிய விதிமுறைகளின்படி, மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் நிர்வாகிகள் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 6 முக்கிய பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம்  முடிவடைந்தது. அதில், ரூபா குருநாத்துக்கு எதிராக வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.