பாஜகவின் அரசியல் தந்திரத்தை முறியடித்த சரத்பவார்!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகப் போவதாக வெளியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் அறிவிப்பு, மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மும்பை காவல் துறை ஆணையர், நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தன் பேரில், அவர் தமது அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, சிவசேனா ஒரு அணியாகவும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஒரு அணியாகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

இந்நிலையில், அம்மாநில கூட்டுறவு சங்கத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் சரத்பவார், அவரது உறவினர் அஜித்பவார் மற்றும் அதிகாரிகள் சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நேரத்தில், இத்தகைய வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்து இருந்தன.

இந்நிலையில், தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட தகவல் வெளியானவுடன், நேற்று மதியம் இரண்டு மணிக்கு, அமலாக்க துறை அலுவலகத்தில் தாமே நேரில் ஆஜராகப்போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் சரத்பவார்.

இதையடுத்து, சரத்பவார் வீடு மற்றும் அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். அறிவிப்பு வெளியாகும் முன்னதாகவே, அக்கட்சி தொண்டர்கள் பலரையும் போலீசார் கைது செய்யத் தொடங்கினர்.

ஆனால், அதையும் மீறி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆங்காங்கே குவிய தொடங்கியதால், மும்பையில் கடும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதையடுத்து, மும்பை நகர காவல் துறை ஆணையர் சஞ்சய் பர்வே, நேரடியாக சரத்பவார் வீட்டுக்கு சென்று, அறிவிப்பை வாபஸ் பெறுமாறு  வேண்டுகோள் விடுத்தார்.

அதன் காரணமாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் அறிவிப்பை சரத்பவார் திரும்பப் பெற்றுக்கொண்டார். இதனால், மும்பையில் அமைதி திரும்பியது.

சரத்பவார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு, தேர்தல் நேரத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பாஜக நினைத்தது என்றும், அதையே, பழுத்த அரசியல்வாதியான சரத்பவார், தமக்கு சாதகமாக பயன்படுத்தி பாஜகவின் அரசியல் தந்திரத்தை முறியடித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.