சிதம்பரம் பாணியில் பிரியங்கா கணவர் ராபர்ட் வதேராவும்  கைது செய்யப்படுவாரா?

பிரியங்காவின் கணவரும், சோனியாவின் மருமகனுமான ராபர்ட் வதேரா, லண்டனில் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வாங்கி உள்ளார். இதில் பண மோசடி நடந்ததாக கூறி மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், விசாரணை நீதி மன்றம் ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உள்ளது.

இந்நிலையில், ராபர்ட் வதேராவை காவலில் எடுத்து விசாரிக்க,  டெல்லி உயர்நீதி மன்றத்தில் மத்திய அமலாக்க துறை அனுமதி கோரி உள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ ராபர்ட் வதேரா இந்த வழக்கின் புலனாய்வு விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், பண மோசடியில் அவர் நேரடியாக தொடர்பு கொண்டிருப்பதால் அவரை கஸ்டடி எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றார்.

அடுத்து, வதேரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “விசாரணைக்காக அமலாக்கத்துறை எப்போதெல்லாம் அழைத்ததோ, அப்போதெல்லாம் வதேரா தவறாமல் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்திருக்கிறார்.

அமலாக்கத்துறை சொல்லும் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ள மறுப்பது என்பது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பது ஆகாது” என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த வழக்கை நவம்பர் 5 ஆம் தேதியன்று ஒத்திவைத்தது.

ஐ என் எக்ஸ் வழக்கிலும், விசாரணை செய்பவர்கள் எதிர்பார்க்கும் பதிலை சொல்லவில்லை என்பதால், விசாரணைக்கு ஒத்துழைக்க வில்லை என்பதா? என்று சிதம்பரம் கூறி இருந்தார்.

சிதம்பரம் வழக்கை  போலவே,  இந்த வழக்கும் செல்வதால், ராபர்ட் வதேராவும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.