புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக!

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற சபாநாயகர் வைத்திலிங்கம், மக்களவை உறுப்பினராக தேர்வானதை அடுத்து, அந்த தொகுதிக்கும் அக்டோபர் 21 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அந்த தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறதா? அல்லது மற்ற கட்சிக்கு ஆதரவு அளிக்கிறதா? என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில், அந்த தொகுதியை ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரசுக்கு அதிமுக ஒதுக்கி உள்ளது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த சந்திப்பில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு காமராஜர் நகர் தொகுதியை ஒதுக்கீடு செய்வது என முடிவெடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதுவை காமராஜர் நகர் தொகுதியில் அதிமுக ஆதரவுடன் பாஜக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவளித்தது.