நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிப்பு!

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்கள் வரும் அக்டோபர் 21- ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் விக்கிரவாண்டியில் நா.புகழேந்தி என்பவர் வேட்பாளாராக நிறுத்தப்பட்டு, பிரச்சாரம் நடந்து வருகிறது.

திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. குமரி அனந்தன், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் ஆகிய நால்வரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு நிகராக பணம் செலவிடும் வகையில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக ரூபி மனோகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக,, நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெளிமாவட்ட வேட்பாளரை நிறுத்தக் கூடாது என நெல்லை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

நாங்குநேரி வட்டாட்சியர்  அலுவலகத்துக்கு நேற்று சென்ற தமிழ்ச்செல்வன், வேட்பு மனு ஆவணங்களை வாங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாங்குநேரியில் போட்டியிட உள்ளூர் நிர்வாகிகள் 8 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தோம்.

நாங்குநேரியில் உள்ளூர் நபருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். எங்களில் யாராவது ஒரு நபருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் கோடிக்கணக்கில் செலவழிக்கக் கூடியவருக்கு மட்டும்தான் வாய்ப்பளிக்க முடியும் என்று கூறினார்கள்.

தொகுதிக்கு வெளியில் இருந்துவரும் வேட்பாளரால், தொகுதி மக்களுக்கு பணியாற்ற முடியாது. இதுதொடர்பாக எங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளோம்.

அப்படி வெளி மாவட்டத்திலிருந்து வேட்பாளர் நிறுத்தப்பட்டால், கட்சியின் முடிவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவோம் ” என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் வசிக்கும் ரூபி மனோகரன், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். எனவே, இந்த பிரச்சினையயும் காங்கிரஸ் கட்சி சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.