கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், அதற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா  பாண்டியராஜன் கூறியுள்ளார்.

கீழடியில் தொல்லியல் தொடர்ந்து நடத்தி வரும் அகழ்வாய்வு பணிகளில், பல்வேறு தொன்மையான பொருட்கள் கிடைத்து வருகின்றன.

கீழடியில் 2015 முதல் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தி வருகிறது. பழமையான நகர நாகரிகம் கீழடியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. முதல் மூன்று அகழாய்வு பணிகளில் 7 ஆயிரத்து ,818 தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.

நான்காம் கட்ட அகழாய்வில் 5 ஆயிரத்து 820 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 33 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதன் ஆறாம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில், கீழடியில் நடைபெற்று வரும் ஆய்வு பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேற்று மீண்டும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் இதற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஐந்தாம்  கட்ட பணிகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் என்றும் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து தொடங்கப்படும். பதினொரு விதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு ஆய்வு நடத்தப்படுகிறது.

இந்த அகழாய்வின் மூலம் இந்தியாவின் பல பகுதிகளுடனான தமிழரின் ஒற்றுமை தெரியவந்துள்ளது. ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெறும்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை 2 மாதத்தில் வெளியிடப்படும். கீழடியின் சின்னம் என்பது திமிலுடன் கூடிய காளை ஆகும். இதற்கான எலும்புகள் கிடைத்திருக்கிறது. கைவினை மற்றும் நெசவுத் தொழில்கள் நடைமுறையிலிருந்துள்ளது. தந்தத்திலான பொருட்களை மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்” என்றும் தெரிவித்துள்ளார்.