அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கே அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து!

பள்ளி படிப்புகளுக்கு தனியார் கல்வி நிலையங்களை நாடுபவர்கள், மருத்துவப்படிப்புக்கு அரசு கல்லூரிகளை நாடுவது ஏன்? என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாததால், அவை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக வழங்கப்படுகின்றன என்று, தீரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் இந்த காலியிடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பவேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடங்களை நிரப்புவதற்கு, நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த மனு இன்று (செப்டம்பர் 27) நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவது தொடர்பாக நீதிமன்றம் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

நிரப்படாத வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு விற்கப்படுவதாகவும், மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், பள்ளிப் படிப்புக்குத் தனியார் பள்ளிகளுக்குச் செல்பவர்கள், மருத்துவ படிப்புக்கு அரசு கல்லூரியை நாடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் அனைவரும் மருத்துவராக வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள், நாங்களும் மருத்துவர்களாக வேண்டும் என்று தான் விரும்பினோம். ஆனால் மதிப்பெண் கிடைக்கவில்லை. அதனால் நீதிபதிகள் ஆகிவிட்டோம் என்று நகைச்சுவையாக கூறினார்.

மேலும் இவ்வழக்கில், தமிழகத்தில் உள்ள 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும்,  வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரங்களை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.