பேனர் வழக்கின் முக்கிய குற்றவாளி: முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது!

சென்னையில் பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்ததில் கடந்த 12 ஆம் தேதி  சுபஸ்ரீ உயிரிழந்தார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கு கடந்த  25 ஆம் தேதி நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மாநகராட்சி சார்பிலும், காவல்துறை சார்பிலும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “முக்கிய குற்றவாளியான ஜெயகோபாலை இன்னும் கைது செய்யாதது ஏன்? சட்ட விரோதமாக அவர் பேனர் வைத்த நிலையில் லாரி ஓட்டுநர் வழக்குடன், அவரது வழக்கைச் சேர்த்தது ஏன்? என்பன உள்ளிட்ட பல கேள்விகளை அரசுத்தரப்பிடம் கேட்டனர்.

இதைத் தொடர்ந்து ஜெயகோபாலை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட சட்டம் ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர்கள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை அக்டோபர் 15 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் ஒரு ரிசார்ட்டில் தங்கி இருந்த ஜெயகோபாலை போலீசார் நேற்று கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது..