இடைத்தேர்தலுக்காக விஜயகாந்தை மட்டும் அமை ச்சர்கள் சந்தித்தது ஏன்?

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனுவாசன், தங்கமணி, ஜெயகுமார் ஆகியோர் விஜயகாந்தை மட்டும் நேரில் சென்று ஆதரவு கேட்டனர்.

கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பாமக, தமாகா ஆகிய கட்சிகள், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு என்று ஏற்கனவே அறிவித்து விட்டன. ஆனால், தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளில் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

கடந்த 24 ம் தேதி திருப்பூரில் பேசிய பிரேமலதா, அதிமுக எங்களை சந்தித்து பேசிய பின்னரே, ஆதரவு அளிக்க முடியும் என்று கூறி இருந்தார். முன்னதாக, கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு அதிமுக உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் இருந்து வந்தது.

இந்த குற்றச்சாட்டு, பாஜகவின் முக்கிய பிரமுகரின் செவிகளுக்கு வர, அவர் அதிமுகவினரிடம் இதை சொல்லி இருக்கிறார். இதையடுத்தே, மூன்று அமைச்சர்களும், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று, பொன்னாடை போர்த்தி, நலம் விசாரித்து ஆதரவு கோரியுள்ளனர்.

மேலும், முதல்வர் எடப்பாடியும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, விஜயகாந்திடம் பேசி இருக்கிறார். அதன், பிறகே, தேமுதிக தரப்பில் இருந்து இடைத்தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இதுவரையில் கூட்டணி கட்சியான பாஜகவில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. அது தேசிய கட்சி என்பதால், சற்று தாமதமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.