மக்கள் முன்னேற்ற காங்கிரஸ்: புதிய கட்சியை தொடங்கினார் புதுச்சேரி கண்ணன்!

புதுச்சேரி மாநில அரசியலில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த முன்னாள் எம்பி கண்ணன், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர் சபாநாயகர், அமைச்சர், ராஜ்யசபா எம்.பி. போன்ற பதவிகளை வகித்தவர்.

கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து விலகிய கண்ணன் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் இரண்டு  முறை தனிக்கட்சி தொடங்கினார். பின்னர், காங்கிரசுடன் தனது கட்சியை இணைத்தார்.

காங்கிரசில் இருந்து விலகி மூப்பனார் தொடங்கிய த.மா.கா.வுக்கு புதுவை மாநில தலைவராகவும் இருந்தார். ராஜ்யசபா எம்.பி. பதவிக்காலம் முடிந்தபின் அவர் அரசியலை விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வில் இணைந்து ராஜ்பவன் தொகுதியில் ப.கண்ணன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சமீபத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து விளம்பரங்களை வெளியிட்டார். இதனால் அவர் பாஜகவில் இணைவார் என்ற பேச்சும் அடிபட்டது.

இந்நிலையில், நேற்று அவர், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார்.

பின்னர் பேசிய அவர், நமது மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கும் என்றார். காமராஜர் நகர் இடைத்தேர்லில் போட்டியிட போவதாகவும் அவர் கூறினார்.