புதிய கட்சி தொடங்குவதில் தீவிரம்: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை சந்தித்த ரஜினி!

ரஜினி அரசியலுக்கு வருவார், வருவார் என்ற எதிர்பார்ப்புடன், பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நம்பிக்கை விரைவில் சாத்தியம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

இதற்கு முன்னர், ரஜினியின் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும், அவர்  சில கருத்துக்களை சொல்வதும், அது படத்தின் புரமொஷனுக்கு உதவுவதுமாகவும் இருக்கும். பின்னர், இமய மலைக்கு செல்வதும் ஓய்வு எடுப்பதுமாகவும் ரஜினி இருப்பார்.

ஆனால், ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின்னர், தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறிய ரஜினியின் அணுகுமுறைகளில், எண்ணற்ற மாற்றங்கள் தென்பட ஆரம்பித்தன.

அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில், தொடர்ந்து சில நாட்கள் ரசிகர்களை சந்தித்தார். மாவட்ட வாரியாக ரசிகர் மன்றங்களின் முக்கிய நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து அரசியல் கட்சி பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். மற்ற கட்சிகளில் உள்ள, தமக்கு நெருக்கமான அரசியல் புள்ளிகளை எல்லாம் சந்தித்து தொடர்ந்து மணிக்கணக்கில் ஆலோசனை செய்து வருகிறார்.

மற்றொரு பக்கம் ரஜினியை அரசியலுக்கு கொண்டு வருவதில் மத்தியில் ஆளும் பாஜகவும் தீவிர ஆர்வம் செலுத்தி வருகிறது. அவரை நேரடியாக பாஜகவுக்கு கொண்டு வர முடியவில்லை என்றாலும், அவரையும், அவரது கட்சியையும் மறைமுகமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது. அதன்மூலம், தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்திகளாக விளங்கும், திமுக மற்றும் அதிமுகவை பலமிழக்க செய்வதும் பாஜகவின் செயல் திட்டமாக உள்ளது.

இதை ரஜினியும் நன்கு அறிந்து வைத்துள்ளார். எனினும், அவருக்கு பாஜகவின் அரவணைப்பின் விருப்பம் இல்லை. அதே சமயம், அவர்களை பகைத்துக் கொள்வதும் நல்லதல்ல என்பது அவருக்கு நன்கு தெரியும்,

இதை எல்லாம் கவனத்தில் கொண்டு, தொடர்ந்து அரசியல் பிரவேசம் குறித்து, ரகசியமாக பல்வேறு பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டுள்ளார் ரஜினி. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் தேர்தல் மற்றும் அரசியல் வியூக நிபுணர் என்று கருதப்படும் பிரசாந்த் கிஷோரை மும்பையில் சந்தித்து, நீண்ட நேரம் அவருடன் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வர, பீகாரில் நிதிஷ் குமார் வெற்றி பெற, ஆந்திராவில் ஜகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க பல முக்கிய வியூகங்களை வகுத்து தந்தவர் என்று அறியப்பட்டவர் பிரசாந்த் கிஷோர்.

அதனால், அண்மையில் மும்பையில் பிரசாந்த் கிஷோரை சந்தித்து, பல்வேறு அரசியல் வியூகங்கள் குறித்து ரஜினி ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, அண்மையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சர்வே, அதில் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு நிலவரம், ரஜினிக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு போன்ற விவரங்களை ரஜினிக்கு விளக்கமாக எடுத்து கூறியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

இதனை தொடர்ந்து, ரஜினி வரும் தை மாதம், புதிய கட்சியை தொடங்குவார் என்றும், திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் உள்ள முக்கிய புள்ளிகள், அவருக்கு பின்னால் வருவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.