நாங்குநேரி இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் யார்?

திமுக கூட்டணியில் நாங்குநேரி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில் போட்டியிட நான்கு பேர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரும், காங்கிரஸ் கட்சியில் இதுவரை வேட்பாளர் யார்? என்ற முடிவு எட்டாமலே இருக்கிறது.

வழக்கம் போல, மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் சிலரது பெயர்களை முன்மொழிய, அதில் ஏதாவது ஒருவரை டெல்லி மேலிடம் இறுதி செய்து வேட்பாளராக அறிவிக்கும்.

அதே வழியில், பட்டியலை தயார் செய்துவிட்டு, தமிழக காங்கிரஸ் தலைவர், விரைவில் டெல்லி செல்வார் என்று காங்கிரஸ் வட்டாரம் கூறுகிறது.

தற்போது, மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், அவரது தம்பி மகனும் நடிகருமான விஜய் வசந்த், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பில் உள்ள அமிர்தராஜ், பில்டர் ரூபி மனோகரன் ஆகியோர் மத்தியில், நாங்குநேரி தொகுதியில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது.

இதில் குமரி அனந்தன் வயதில் மூத்த தலைவர். அவருக்கு தேர்தல் செலவுகளை எதிர்கொள்ள போதுமான பணம் இல்லை என்று கூறுகின்றனர்.

அவரது தம்பியும், கன்யாகுமரி எம்பியுமான வசந்தகுமார், தனது மகன், விஜய் வசந்த்தை வேட்பாளராக்க விரும்புகிறார். அதற்காக செலவு செய்யவும் தயாராகவும் இருக்கிறார்.

இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரான அமிர்தராஜும், நாங்குநேரியில் போட்டியிட, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இவர் ராகுலுக்கு நெருக்கமானவர் என்பதுடன், வலுவான பொருளாதார பின்னணியையும் கொண்டவர்.

அடுத்து, கட்டுமான தொழிலில் பிரபலமாக விளங்கும் ரூபி மனோகரனும், நாங்குநேரியில் போட்டியிட மற்றொரு மார்க்கத்தில் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நான்கு பேரில், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பில் உள்ள அமிர்தராஜுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், கடைசி நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.