வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு!

டெல்லியில் வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து, அம்மாநில மக்களுக்கு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அண்மையில், அரசுப்பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் டெல்லி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு, 200 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் முன் பணம் செலுத்தி மீட்டர்களை பெற்றுக்கொள்ளலாம். இதை பெறுவதற்கு, வாடகை ஒப்பந்த நகலை ஒப்படைத்தால் போதுமானது என்று கூறி உள்ளார்.

மேலும், டெல்லியில் வசிக்கும் மக்கள் அனைவரும், 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால், அதற்கு கட்டணம் தேவை இல்லை என்று கடந்த மாதம் ஒன்றாம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவு படுத்தப்படுகிறது என்று கூறி உள்ளார்.

மாதம் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர், மின்சார கட்டணம் செலுத்த தேவை இல்லை. அதற்கு மேல், ஒரு யூனிட் அதிகம் பயன்படுத்தினால் கூட மொத்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.