அதிமுக வேட்பாளர்களின் பின்னணி என்ன?

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு ஆர்.முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதிக்கு ரெட்டியார்பட்டி நாராயணனும் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள காணை ஒன்றிய செயலாளர் முத்தமிழ் செல்வன், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளர். வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கல்பட்டு என்னும் ஊரை சேர்ந்தவர். ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு படித்துள்ளார். ஏற்கனவே, காணை ஒன்றிய துணை தலைவராக இருந்தவர். தற்போது, காணை ஒன்றிய அதிமுக செயலாளராக இருக்கிறார்.

அமைச்சராக இருக்கும் சி.வி.சண்முகத்தின் செல்வாக்கும், கூட்டணி கட்சியான பாமக இந்த தொகுதியில் வலுவான வாக்கு வங்கியை பெற்றிருப்பதும், வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது அதிமுகவின் கணக்கு.

நாங்குநேரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரெட்டியார்பட்டி நாராயணன், நெல்லை புற நகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக இருக்கிறார். நாடார் சமூகத்தை சேர்ந்தவர். ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னுக்கு வந்தவர். அட்சயா பில்டர்ஸ் என்ற இவரது கட்டுமான நிறுவனம், நெல்லை மாவட்டத்தில் பிரபலமான நிறுவனமாகும்.

இவரது மனைவி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். முன்னாள் அமைச்சரும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான தளவாய் சுந்தரத்தின் சிபாரிசு இவரை நாங்குநேரி வேட்பாளராக ஆக்கியுள்ளது.