இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தேர்வில் பன்னீரை ஓரம்கட்டிய எடப்பாடி!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதில், பன்னீரை ஓரம் கட்டி, கட்சியில் தமது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

விக்கிரவாண்டியில் ஆர்.முத்தமிழ் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணனும் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டியில் அமைச்சர் சி.சண்முகத்தின் மூலமும், நாங்குநேரியில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் மூலமும்,  முதல்வர் எடப்பாடி, பன்னீரை ஓரம் கட்டுவதில் சாதித்து இருக்கிறார்.

முன்னாள் எம்பி மற்றும் விழுப்புரம் மாவட்ட முன்னாள் செயலாளரான டாக்டர் லக்ஷ்மணன், துணை முதல்வர் பன்னீரின் தீவிர ஆதரவாளர். பன்னீர் தனியாக பிரிந்து சென்றபோது, அவருடன் சென்றவர். இவருக்கு எப்படியாவது, விக்கிரவாண்டி தொகுதியில் சீட் வாங்கி தந்துவிட வேண்டும் என்பதற்காக இறுதிவரை கடுமையாக போராடினார் பன்னீர்.

ஆனால், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் லக்ஷ்மனனுக்கும் ஒத்துப்போகாது. மேலும், சி.வி.சண்முகத்தை மீறி, விக்கிரவாண்டி தொகுதிக்கு வேட்பாளரை அறிவிப்பதும் அவ்வளவு எளிதானது அல்ல.

இந்த நிலையை பயன்படுத்தி, விக்கிரவாண்டியில் லக்ஷ்மணனுக்கு சீட் கொடுக்காமல், சி.வி.சண்முகம் சிபாரிசு செய்த ஆர்.முத்தமிழ் செல்வனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகனான, வழக்கறிஞர் மனோஜ் பாண்டியனும், பன்னீரின் தீவிர ஆதரவாளராக இருந்து, மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானவர். இவரை நாங்குநேரி தொகுதி வேட்பாளர் ஆக்கிவிட வேண்டும் என்றும் இறுதி வரை கடும் முயற்சிகளை மேற்கொண்டார் பன்னீர்.

ஆனால், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் பரிந்துரையின் பேரில், நாங்குநேரி வேட்பாளராக, ரெட்டியார்பட்டி நாராயணனை வேட்பாளர் ஆக்கியதன் மூலம், இங்கும் பன்னீருக்கு செக் வைத்தார் எடப்பாடி.

இதன்மூலம், கட்சியிலும், ஆட்சியிலும் தனது செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளதுடன், பன்னீரை ஓரம் கட்டியுள்ளார் எடப்பாடி என்கின்றனர் அதிமுகவினர்.