சுபஸ்ரீ வழக்கில் முன்னாள் கவுன்சிலரை ஏன் கைது செய்யவில்லை?: உயர் நீதிமன்றம் கேள்வி!

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை இதுவரை கைது செய்யாதது என்? என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், இளம்பெண்  சுபஸ்ரீ அண்மையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து, வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு இவ்வழக்கை வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பேனர் வைத்த ஜெயகோபால், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், இதுவரை காவல் துறையினர் அவரை கைது செய்யப்படவில்லை. எனவே, விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும். டிஜிபி கண்காணிக்க உத்தரவிடவேண்டும்” என திமுக சார்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பிலும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி அறிக்கையில், சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட்டுள்ளது. உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அறிக்கையில், பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஜெயகோபாலை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, முக்கிய குற்றவாளியான ஜெயகோபாலை இன்னும் கைது செய்யாதது ஏன்?  லாரி ஓட்டுநர் வழக்குடன், சட்ட விரோதமாக பேனர் வைத்தவர் வழக்கைச் சேர்த்தது ஏன்? அவர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என அரசுத்தரப்பிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளைக் கேட்டனர்.

மேலும், ஜெயகோபாலை கைது செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து, சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் மற்றும் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் அறிக்கை அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அத்துடன், மொத்த வழக்கையும் சென்னை காவல் ஆணையர், கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த விசாரணையின் போது, தாங்கள் நேரில் சென்று பேனர்களை அகற்றவில்லையே தவிர, அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்துவிட்டதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.