அண்ணா பல்கலைக்கழக பாடப்பிரிவில் பகவத் கீதை: திமுக கண்டனம்! 

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் தத்துவவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பரிந்துரையின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள எம்.ஐ.டி. சி.இ.ஜி, ஏ.சி.டி, எஸ்.ஏ.பி. வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்த பாடங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதற்கு, திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவவியலை விருப்பப் பாடமாக மாற்ற அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

தத்துவவியல், பகவத் கீதை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் விருப்ப பாடமாக வழங்கப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்  சூரப்பா தெரிவித்துள்ளார்.

 இது, அண்ணா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அண்ணா பல்கலைக்கழகத்தின்  சிஇஜி கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில், “இந்திய – மேல்நாட்டு தத்துவப் படிப்பு” என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் – திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, பல்கலைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும், உயர்கல்வித்துறையும் இந்தப் பண்பாட்டு ஆதிக்கப் பாடத்திட்டத்தை மாற்றிடவேண்டும் என பதிவிட்டுள்ளார்.