நடிகர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கும் காங்கிரஸ்!

நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில், ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

விழாவில் பேசிய நடிகர் விஜய்,  சுபஸ்ரீ என்ற பெண் பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் வகையில் சிலர் கருத்துக்களை  பேசினார். இது, தமிழக அரசை அவர் தாக்கி பேசியதாக கூறப்பட்டது.

இதையடுத்து, விழா நடத்துவதற்கு அரங்கம் வழங்கிய, தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு, உயர் கல்வி சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

கல்லூரி வளாகத்தின் திரைப்பட விழாவுக்கு அனுமதி வழங்கியது விதிமுறைகளை மீறிய செயல் என்றால், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கலாமா?.

விழாவில், நடிகர் விஜய் கூறிய சில கருத்துகள் ஆளும் அ.தி.மு.க-வினருக்கு எதிராகப் பேசியதாக தவறாகப் புரிந்துகொண்டு இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஏவி விடப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில், சென்னை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாக்களில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் என அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்று உரையாற்றியுள்ளனர்.

இதைப் போல தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடைபெறுகிற விழாக்களிலே அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கலந்துகொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து யாரும் குற்றம், குறை கூறியதில்லை.

இதை அனுமதித்த கல்லூரி நிர்வாகத்தினருக்கு எந்த அரசும் நோட்டீஸ் அனுப்பி மிரட்டியது கிடையாது. ஜனநாயகத்தில் இத்தகைய நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த பொதுத்தேர்தலுக்கு முன், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவிகளிடையே உரையாற்ற அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு எதிராக, இதே தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது. அன்று இச்செயலை அனைத்து எதிர்கட்சிகளும் வன்மையாகக் கண்டித்தன.

அதேபோல, இன்றைக்கு நடிகர் விஜய் பங்கேற்ற இசை வெளியீட்டு விழா நடத்த அனுமதித்ததற்காக, தனியார் பொறியியல் கல்லூரிக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை வழங்கிய நோட்டீஸை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.