ராஜேந்திர பாலாஜி அதிமுக அமைச்சரா? பாஜக கொள்கை பரப்பு செயலாளரா?

அண்மைக்காலமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காங்கிரசுக்கு எதிராக உதிர்க்கும் வார்த்தைகளை பார்க்கும்போது, அவர் அதிமுக அமைச்சரா? அல்லது பாஜக கொள்கை பரப்பு செயலாளரா? என்ற சந்தேகம் வலுக்கிறது.

ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அமைச்சர்கள் யாரும் வாய் திறப்பதும் இல்லை. பத்திரிகையாளர்களை சந்திப்பதும் இல்லை. அவர் இறந்த பிறகு, பல அமைச்சர்கள் பேசும் பேச்சு சர்ச்சைக்கு உரியதாக இருக்கிறது. குறிப்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள், அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

காங்கிரஸ் காந்தியின் தாய் மாமன் இத்தாலி நாட்டுக்காரர். அவரது மடியில் வைத்தா ராகுலுக்கு காது குத்தினார்கள்? என்று அவர் கேட்ட கேள்வி.. தமிழகம் முழுவதும், காங்கிரஸ் காரர்களை போராட்டம் நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றது. புகார்களும் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று, விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூரைப் பற்றி தடித்த வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்துள்ளார் அவர். மாணிக் தாகூர் ஓட்டு கேட்டும் வரவில்லை, நன்றி சொல்லவும் வரவில்லை. டெல்லியிலேயே உட்கார்ந்துள்ளார். அவர் இங்கு வந்தால், துப்பாக்கியால் சுடுங்கள் என்று சொன்னவர், மீண்டும் சுதாரித்துக் கொண்டு ரப்பர் குண்டுகளால் சுடுங்கள் என்று கூறி இருக்கிறார்.

இது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, சாத்தூர் காவல் நிலையத்தில், திங்கள் கிழமை அன்று, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், போராட்டம் இன்னும் கடுமையாக இருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சட்டப்படி இதை எதிர்கொள்வோம் என்றும் கூறியுள்ளனர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தம் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, காங்கிரசையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து, பாஜகவின் ஆதரவை பெற முயற்சிக்கிறார் என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.

மேலும், ராஜேந்திர பாலாஜி அதிமுக அமைச்சரா? அல்லது பாஜக கொள்கை பரப்பு செயலாளரா? என்ற சந்தேகம் வலுக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதே வகையில், ஏற்கனவே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, பூமிக்கு பாரம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.