வைகோவின் மகனும் அரசியலுக்கு வருகிறாரா?

பெரியார், காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தில் வாரிசு இல்லாத வரலாற்று தலைவர்களாக விளங்கி வருகின்றனர்.
திமுகவை பொறுத்தவரை, கருணாநிதி தீவிர அரசியலில் இருந்த காலத்திலேயே, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் அரசியலுக்கு வந்து விட்டனர்.
கலைஞர் மறைவுக்குப் பிறகு, ஸ்டாலின் நீண்ட காலம் பொறுப்பில் இருந்த இளைஞர் அணிக்கு அவரது மகன் பொறுப்புக்கு வந்து விட்டார்.
பாமகவில் டாக்டர் அன்புமணி பொறுப்புக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் மத்திய அமைச்சராக இருந்து, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.
தேமுதிக விலும், விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரன் கட்சி நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொள்ள ஆரம்பித்து விட்டார். தலைமை முடிவெடுத்தால், இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்றும் அறிவித்து விட்டார்.
மதிமுகவை பொறுத்தவரை, வைகோவின் மகன் துரை வையாபுரி, இதுவரை கட்சி நடவடிக்கைகளில் பெரிதாக பங்கேற்றதாக தெரியவில்லை. இந்நிலையில், சைதாபேட்டையில், மதிமுக போஸ்டர் மற்றும் பதாகைகள் தொடர்பாக எழுந்த மோதலில், மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், மதிமுகவினர் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர். அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று, துரை வையாபுரி ஆறுதல் கூறி இருக்கிறார்.
உடல்நல பாதிப்பால், சிகிச்சை பெற்று வரும் வைகோ, நேரில் செல்ல முடியாத நிலையில், துரை வையாபுரி நேரில் சென்று ஆறுதல் கூறியதாக சொல்லப்படுகிறது.
அதேசமயம், மதிமுகவில் உள்ள பலர், துரை வையாபுரிக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் என்று வைகோவை வலியுறுத்தி வருகின்றனர். வைகோ, இதில் என்ன முடிவு எடுப்பார்? என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. .
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக வாழப்பாடியார் வரும் வரை, தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தவர் மறைந்த மூப்பனார். பல மாநிலங்களுக்கு முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு அவருக்கு இருந்தது.
அவர், தீவிர அரசியலில் இருக்கும் வரை, ஜி.கே. வாசன் என்று ஒருவர் இருப்பதே வெளியில் தெரியாத அளவுக்கு இருந்தது., மூப்பனார். மரணப்படுக்கையில் இருக்கும்போதுதான், வாசன் வெளியுலகுக்கு தெரிய ஆரம்பித்தார்.
மூப்பனார் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறந்தபோதுதான், அவருடைய புகைப்படமே ஊடகங்களுக்கு வந்தது. இப்படியும் சிலர் அரசியலில் இருக்கத்தானே செய்கிறார்கள்.