பல்நோக்கு அடையாள அட்டை: சிதம்பரத்தை பின்பற்றும் அமித்ஷா!

ஒரே நாடு, ஒரே அட்டை என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சென்னையில் முன்மொழிந்த பல்நோக்கு அடையாள அட்டை திட்டத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தற்போது வழிமொழிந்துள்ளார்.

ஆதார், பாஸ்போர்ட், வங்கி கணக்கு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அட்டைகள் இல்லாமல், அனைத்தையும் ஒரே அட்டையில் இருக்க வகை செய்வதே  தேசிய பல்நோக்கு அடையாள அட்டையாகும்.

அரசின் ஒவ்வொரு சேவையை பெறும்போதும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்தனி சான்றிதழை இணைக்கும் நிலையை மாற்ற இந்த திட்டத்தை ப.சிதம்பரம் முன்மொழிந்தார்.

அனைத்துக்கும் ஒரே அட்டையில் பயன்படுத்தும் பல்நோக்கு தேசிய அட்டை என்ற திட்டத்தை, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சென்னையில் 2009 ம் ஆண்டு முன்மொழிந்தார். ஆனால், இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவர முடியாமல் போய்விட்டது.

இந்நிலையில், டெல்லியில் திங்கள் கிழமையன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணைய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய, மத்திய அமைத்ஷா, பாஸ்போர்ட், ஆதார், ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்குகள் போன்ற அனைத்துக்கும் ஒரே அட்டையை பயன்படுத்தும், தேசிய பல்நோக்கு அடையாள அட்டைகள் பற்றி யோசனை தெரிவித்தார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்படும் தகவல்கள், நாட்டின் எதிர்கால திட்டமிடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். அரசின் மேம்பாட்டு திட்டங்கள், முயற்சிகள் என்னென்ன என்பதை நாட்டின் 130 கோடி மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அமித்ஷா கூறினார். 2021  ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகள், மொபைல் ஆப் மூலம் சேகரிக்கப்படும் என்றும் கூறினார்.

இதன்மூலம், சிதம்பரம் முன்மொழிந்த திட்டத்தை அமித்ஷா வழிமொழிகிறார். இந்த வகையில் மேலும் பல திட்டங்கள் வழி மொழியப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.