காப்பான் நம்பியவர்களை காப்பானா?

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக, விக்ரம், சூரியா போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் பல படங்கள் பெரிதாக வெற்றி அடைவதில்லை. ஆனாலும், அவர்கள் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வரிசையில், சூர்யா நடித்து, கே.வி.ஆனந்த் இயக்கி, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த காப்பான் படமும், கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவில் ஆரம்ப கட்ட வசூல் இல்லை என்றே தகவல்கள் கூறுகின்றன.

சூர்யாவுடன்  ஆர்யா, மோகன்லால், சமுத்திரக்கனி, சாயிஷா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே, தொடர் தோல்வியை சந்தித்து வரும், நடிகர் சூர்யாவுக்கு காப்பான் வெற்றிப்படமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அண்மைக்கால படங்களில், இதுவரை, எந்த நாயகனும் பேசாத அளவுக்கு சூர்யா இப்படத்தில் சமகால அரசியலை பேசி இருக்கிறார். இயற்கை விவசாயம், கார்பரேட் நிறுவனங்களின் டெல்டா நில ஆக்கிரமிப்பு என அனைத்தும் இப்படத்தில் நேரடியாக பேசப்பட்டிருந்தது.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்த காப்பான், வெளியான பிறகு நல்ல ஒப்பனிங் இல்லாததால், வசூலில் பின் தங்கியே இருப்பதாக கூறுகின்றனர்.

இந்தப்படத்தின் தமிழக உரிமை 22  கோடி ரூபாய். ஆனால், படம் வெளியான மூன்று நாட்களிலும் இதன் வசூல் 14. 75 கோடி அளவுக்கே மந்தமாக இருந்துள்ளது.

காப்பான் படம் சரியான ஓபனிங் இல்லாமல் போனதற்கு, அதை வெகுமக்களிடம் சரியாக கொண்டுபோய் சேர்க்காததே காரணம் என்று திரை வட்டார தகவல்கள் தெறிக்கின்றன.

காப்பான் படம், சூர்யா, தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களை காப்பானா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.