விக்கிரவாண்டி – நாங்குநேரி இடைத்தேர்தல்: திமுக அதிமுகவுக்கு தேசிய கட்சிகள் நெருக்கடி!

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு, வரும் அக்டோபர் 21 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.

நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எச்.வசந்த குமார், கன்யாகுமரி எம்பி ஆனதாலும், விக்கிரவாண்டி தொகுதி உறுப்பினர் ராதாமணி காலமானதை தொடர்ந்தும், இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்  நடைபெறுகிறது.

கூட்டணி தர்மத்தின் அடிப்படையில், நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிவிட்டு, விக்கிரவாண்டியில் திமுக களம் இறங்குகிறது. நாங்குநேரி தொகுதியை, திமுக முழு மனதுடன் ஒதுக்காமல், காங்கிரஸ் மேலிடம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே ஒதுக்கி உள்ளதாக ஒரு பேச்சு உள்ளது.

அதனால், தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர், திமுக போட்டியிடும் விக்கிரவாண்டியில் குவிவார்களே ஒழிய, நாங்குநேரி பக்கம் திரும்பமாட்டார்கள். எனவே காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு பின்னடைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

மறுபக்கம், அதிமுக கூட்டணியில் தற்போது இடம்பெற்றுள்ள பாஜக, நாங்குநேரி தொகுதியை கேட்டு வற்புறுத்தி வருவதால், அதிமுக வேறு வழியின்றி அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை, நாங்குநேரி தொகுதியில் பாஜக போட்டியிடுவது உறுதியானால், அது இரண்டு தேசிய கட்சிகளுக்கும் இடையிலான போட்டியாகவே இருக்கும். விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை, அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே கடுமையான போட்டியை சந்திக்க வேண்டிவரும்.

கடந்த தேர்தலில், திமுக சார்பில் விக்கிரவாண்டியில் போட்டியிட்ட ராதாமணி 63,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் இருந்தது. அதிமுக தனித்து நின்று 56,845 வாக்குகளை பெற்றது. பாமக தனித்து நின்று   41,428 வாக்குகளை பெற்றிருந்தது.

இந்த இடைத்தேர்தலில், அதிமுகவுக்கு பாமகவின் பலமான வாக்கு வங்கியும் சேர்ந்துள்ளது. அமைச்சர் சி.வி.சண்முகம், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால்,   விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அவர்களுக்கு ஒரு கவுரவ பிரச்சினை. அதனால், இவர்களின் பங்களிப்பு கடுமையாக இருக்கும்.

அதேசமயம், விக்கிரவாண்டி, ஏற்கனவே திமுக வெற்றிபெற்ற தொகுதி என்பதால், அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு  இருக்கிறது. எனவே, திமுகவும் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.