ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது உறுதி?

ரஜினி அரசியலுக்கு வருவார், வருவார் என்று இதுவரை காத்துக் கொண்டிருந்த அவரது தீவிர ரசிகர்கள் பலரும் ஐம்பது வயதை கடந்து விட்டனர்.

சினிமா சந்தையில், இன்று விஜய், அஜித் ஆகிய இரு நடிகர்களின் ரசிகர்களே இளைஞர்களாக உள்ளனர். மேலும், லிங்கா படம் தொடங்கி, ரஜினி நடித்த பல படங்கள் பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. பேட்டை படம் மட்டுமே கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் அரசியல் ஆளுமைகள் இல்லாத நிலையில், ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினியே சரியான சாய்ஸ் என்றும் பலர் பேசி வருகின்றனர்.

உண்மையில், தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினிதான் சரியான சாய்ஸ் என்பதை ஏற்பதா? மறுப்பதா? என்ற விவாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுக – திமுகவுக்கு மாற்றாக ஒரு வலுவான இயக்கம் உருவாக வேண்டியது அவசியம் என்பதை ஏற்கத்தான் வேண்டும் என்கின்றனர் மூத்த அரசியல் விமர்சகர்கள்.

இந்த நிலையில், வரும் தை மாதத்திற்கு பிறகு, ரஜினி கட்டாயமாக ஒரு கட்சியை தொடங்கி, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்றும், அதற்காக ஒவ்வொரு ஊராட்சி வாரியாக ரசிகர் மன்றங்களை பலப்படுத்தும் முயற்சியில் அவர் தீவிரம் காட்டி வருவதாகவும் ரசிகர்கள் சிலர் கூறுகின்றனர்.

ரஜினி தற்போது நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், ரஜினி மன்ற மூத்த நிர்வாகிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான பல்வேறு கட்சிகளை சேர்ந்த மூத்த அரசியல் நண்பர்கள் சிலரிடமும் தொடர்ந்து இது குறித்து அவர் பேசி வருகிறார் என்றும் தகவல்கள் சொல்லப்படுகிறது.

அதேசமயம், ரஜினியை வைத்து தமிழகத்தில் திமுக அதிமுகவை வீழ்த்த, பாஜக மேலிடமும் காய் நகர்த்தி வருவதாகவும் ஒரு பேச்சு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக அதிமுக இருக்கும் வரை, மற்ற கட்சிகள் காலூன்றுவது சாத்தியம் இல்லை,. குறிப்பாக பாஜகவால் அதை நினைத்து கூட பார்க்க முடியாது.

ஆனால், ரஜினியோ தாம் பாஜக ஆதரவாளர் என்ற முத்திரையை விலக்க கடுமையாக போராடி வருகிறார். என்றாலும், பாஜக விடுவதாக இல்லை. குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில், ரஜினியை பங்கேற்க வைத்ததே இதற்கு சாட்சியாகும்.

இந்நிலையில், ரஜினி தனி கட்சி தொடங்குவது உறுதி. அவ்வாறு தொடங்கி தேர்தலில் போட்டியிடும்போது, அதில் பாஜகவை சேர்த்துக் கொள்வதா? இல்லையா? என்பதை பின்னால் முடிவு செய்வார் என்றே கூறப்படுகிறது.