தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வரும் 24 மற்றும் 25 தேதிகளில் கனமழைப்பு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த ஒரு வார காலமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி, சென்னைக்கு அருகில் வந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அதற்கு அடுத்தபடியாக ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னை அருகே உள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் மற்றும் மத்திய மாவட்டங்களில் சில இடங்களில் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியுள்ளார்.

இதில் இன்றும்,  நாளையும் திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி வங்கக்கடலில் உருவாகி, சென்னைக்கு கீழே வருகிற 23-ந்தேதி இரவு வருகிறது. இதனால் வருகிற 24, 25-ந்தேதிகளில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது என்றும் புவியரசன் கூறியுள்ளார்.