தமிழர்களின் தொன்மையை உலகுக்கு உணர்த்தும் கீழடி அகழ்வாய்வுகள்

தமிழகத்தில், கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே, தமிழ் பிராமி எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது கீழடி அகழ்வாய்வின் வாயிலாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம், சங்க காலம் என்பது, இதற்கு முற்பட்ட கணிப்புகளை விட மேலும் நானூறு ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதியின் தெற்கு கரை பகுதியில் உள்ள, கீழடி என்ற இடத்தில், தமிழக அரசின் சார்பில், கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள், தமிழக அரசின் சார்பில் நேற்று கையேடாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன், துறை செயலாளர் உதய சந்திரன் ஆகியோர் இதை வெளியிட்டனர்.

இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், சங்க காலம் என்பது, மேலும் நானூறு ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என்பது தெரியவந்துள்ளது.

சிந்து சமவெளி அகழ்வாய்வின்போது கிடைத்த திமில் உள்ள காளையின் எலும்புகள், கீழடி ஆய்விலும் கிடைத்திருப்பதால், இவ்விரு நாகரீகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், இங்கு கிடைத்த பொருட்கள் உலகின் புகழ்பெற்ற பகுப்பாய்வு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

கீழடி அகழ்வு ஆராய்ச்சியில், விவசாயத்திற்கு பயன்படும்  காளைகள், பசு, எருமை, ஆடு போன்றவற்றை, அங்கு வாழ்ந்த பயன்படுத்தி வந்ததும் இந்த ஆய்வின் மூலம் தெரிகிறது. அறியப்படுகிறது.

மேலும்,களிமண், செங்கல், சுண்ணாம்பு, இரும்பு ஆணிகளை பயன்படுத்தி வீடுகள் கட்டப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களும் கீழடியில்  கிடைத்துள்ளன.

இங்கு கிடைத்த பழங்கால பானை ஓடுகளில் பழங்கால தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருப்பதையும் காண முடிகிறது.

இது தவிர, நூல் நூற்கும் தக்கழிகள், எலும்பால் செய்யப்பட்ட கருவிகள், தங்க அணிகலன்கள், தந்தத்தால் செய்யப்பட்ட சீப்புக்கள், தாயக்கட்டைகள் போன்றவையும் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது, தமிழ் சமூகம் சங்க காலத்திலேயே எழுத்தறிவு பெற்ற சமுதாயமாக இருந்துள்ளதுடன், விளையாட்டுக்களில் அதிக கவனம் செலுத்தியுள்ளதை உணரமுடிகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கீழடி அகழ்வாய்வு முடிவுகள், தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்கும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். இந்த தருணத்தில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கும், செயலாளர் உதயசந்திரனுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த அகழ்வாய்வை மீண்டும் தொடங்கி, அருங்காட்சியகம் அமைப்பதுடன், இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்று, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.