காப்பான் படம் வெளியீடு: பேனருக்கு பதில் 200 பேருக்கு ஹெல்மெட் வழங்கிய சூரியா ரசிகர்கள்!

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் தங்களுக்காக பேனர் வைக்கக் கூடாது என தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு கட்டளை இட்டனர்.

இந்நிலையில், நடிகர் சூரியா நடித்த காப்பான் படம் வெளியானதை தொடர்ந்து, அவரது ரசிகர்கள், பேனருக்கு செய்யும் செலவை, 200 பேருக்கு, ஹெல்மெட் வழங்கி கொண்டாடினர்.

திருநெல்வேலியில், காப்பான் படம் வெளியானதை கொண்டாடும் வகையில், சூரியா ரசிகர்கள், இந்த வித்யாசமான முயற்சியில் ஈடுபட்டு, பலரது  பாராட்டுக்களையும் பெற்றுள்ளனர்.

நடிகர் சிவகுமார், சினிமாவில் நடித்து புகழ் பெற தொடங்கிய நாளில் இருந்து, ஏழை எளிய மக்கள் கல்விக்கு உதவும் வகையில் பல்வேறு நிதி உதவிகளை செய்து வருகிறார்.

அவரது மகன்களான நடிகர் சூரியா, நடிகர் கார்த்தி ஆகியோரும், தங்களது அறக்கட்டளை சார்பில் பல்வேறு ஏழை எளிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்ட சூரியா ரசிகர்கள், காப்பான் பட வெளியீட்டை கொண்டாடும் வகையில், 200 பேருக்கு ஹெல்மெட் வழங்கி இருப்பதும் பலரது பாராட்டை பெற்றுள்ளது.