திமுகவுடன் மோதல் போக்கு: வன்னியர்களை வசப்படுத்தும் பாமகவின் புது வியூகம்!

அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் கடந்த 17 ம் தேதி  நடந்த, காடுவெட்டி குரு மணிமண்டப திறப்பு விழாவில், டாக்டர் ராமதாஸ் பேசிய பேச்சு, திமுக மற்றும் இதர வன்னியர் அமைப்புகள்  மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழாவில் பேசிய ராமதாஸ், காடுவெட்டி குருவை கொலை செய்ய, திமுக ஆட்சியின்போது, முயற்சிகள் நடைபெற்றதாகவும், அதை தாங்கள் தடுத்து நிறுத்தியதாகவும் பேசினார். மேலும், எந்த சாதியையும், தமது சமூக தலைவர்களை விமர்சிப்பதில்லை. என்னை விமர்சிக்கும் சொந்த சாதிக்காரர்கள் கங்காணிகள் என்றும் கூறி இருந்தார்.

இந்த இரண்டு விஷயங்களுக்குமே, திமுக தரப்பில் இருந்தும், இதர வன்னியர் சங்கங்கள் மற்றும் முகநூல் வன்னிய இளைஞர்கள் சார்பிலல் கொடுக்கப்படும் பதிலடிகளால், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கடும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

திமுக சார்பில் அரியலூர் மாவட்ட செயலாளர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் ராமதாசுக்கு பல்வேறு விளக்கம் அளித்துள்ளதுடன், பல எதிர் கேள்விகளையும் விடுத்துள்ளார். அவருக்கு பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பதில்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

மறுபக்கம், முகநூலில் பரபரப்பாக இயங்கும், இதர வன்னிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் துடிப்பான இளைஞர்கள், டாக்டர் ராமதாசின் பேச்சுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின், பல்வேறு பிரச்சினைகளில் கருத்துக்கூட சொல்லாமல், அமைதியாக இருந்த    டாக்டர் ராமதாஸ், திடீரென இப்படி அரசியல் பரபரப்புக்கு காரணமாக இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

இது குறித்து, அக்கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் எதிர்வினையாற்றும் இதர வன்னியர் அமைப்புகள் மத்தியில் பேசப்படும் தகவல்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளன.

2009  ம் ஆண்டுக்கு பிறகு பாமகவின் பிரதிநிதித்துவம் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெரிதாக இல்லை. தர்மபுரி சிட்டிங் எம்பியாக இருந்த அன்புமணியே, கடந்த சட்டமன்ற தேர்தலில்,  பென்னாகரத்தில் தோல்வியை சந்தித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத்திலும், பாமகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட தர்மபுரியில் அவர் தோல்வியை தழுவினார்.

மறுபக்கம், ஒரு காலத்தில் தமது கட்டுப்பாட்டுக்குள் வலுவாக இருந்த வன்னியர்கள், இன்று, பல இடங்களில் பிரிந்து, பல்வேறு அமைப்புகளை உருவாக்கி, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சேவைகளை செய்து சமூகத்தில் நன் மதிப்பை பெற்று வருகின்றனர்.

அத்துடன், வரலாற்று ஆய்வுகள் தொடங்கி, அரசியல் திறனாய்வு வரை சிறப்பாக செய்து வரும், வன்னிய இளைஞர்கள் பலர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இயங்கி பல்வேறு சமுதாய முன்னெடுப்புக்களில் தீவிரம் காட்டி வருகின்றனர். இவர்களின் கருத்து பெரும்பாலும் தமக்கு எதிராக இருப்பதாகவே, பாமக தலைமை நினைக்கிறது.

இந்த நிலை தொடர்ந்தால், பாமகவின் எதிர்காலம் கவலைக்குள்ளாகி விடும். எனவே இவற்றை எதிர்கொள்ள, தமிழக அரசியலில், பாமக மீண்டும் தமது நிலையை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும், வன்னியர் மத்தியில் சரிந்து வரும் தமது செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டிய நிலைக்கும் ஆளாகி இருக்கிறது பாமக.

இதன் வெளிப்பாடே, காடுவெட்டி குரு மணிமண்டப திறப்பு விழாவில், டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பேச்சுக்கள், திமுகவை சீண்டும் வகையிலும், இதர வன்னியர் அமைப்புகள் மற்றும் முகநூலில் ஆக்டிவாக இயங்கும் வன்னிய இளைஞர்களை விமர்சிக்கும் வகையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கு, திமுக தரப்பில் பல்வேறு அறிக்கைகள் வாயிலாக எதிர்வினை ஆற்றப்பட்டு வருகிறது. இது, சுணங்கி இருந்த பாமகவுக்கு ஒரு பூஸ்ட் ஆகவே இருக்கும்.

ஆனால், முகநூலில் எதிர்வினையாற்றும் வன்னிய இளைஞர்கள் மற்றும் இதர வன்னியர் அமைப்புகளின்  கருத்து வேறு விதமாக இருப்பதை அவர்களது பதிவின் வாயிலாகவே உணரமுடிகிறது.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் சோழர் முடிசூட்டு விழா, மன்னன் கொப்பெரும்சிங்கன் குரு பூஜை, போன்றவற்றில் டாக்டர் ராமதாஸ் குடும்பத்தினர் மற்றும் பாமகவினர் கலந்து கொள்வதற்கு தங்களுடைய முன்னெடுப்புகளே காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இதுவரை, ராமசாமி படையாட்சியாரை கடுமையாக விமர்சனம் செய்து வந்த டாக்டர் ராமதாஸ், தற்போது, ராமசாமி படையாட்சியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிலைக்கு கொண்டு வந்ததற்கும் தங்களது முன்னெடுப்புகளே காரணம் என்றும் கூறுகின்றனர்.

இது தவிர, சமூகம் என்றாலே, அது டாக்டர் ராமதாஸ் என்று இருந்த பல்வேறு வன்னிய இளைஞர்கள், இன்று, மற்ற கட்சிகளில் உள்ள வன்னிய தலைவர்களை அனுசரித்தும், அவர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட ஆரம்பித்து விட்டனர். இது, பாமகவின் தலைமையை மிகவும் கவலை அடைய செய்துள்ளது.

இந்த நிலையில், திமுகவை சீண்டிப் பார்ப்பதன் மூலம், பாமகவின் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் என்பதை உணர்ந்து, அந்த பரபரப்பு உருவாக்கப்பட்டு விட்டது.

மறுபக்கம், இதர வன்னிய அமைப்புகள் மற்றும் முகநூலில் வலுவாக இயங்கும் வன்னிய இளைஞர்களை வளைப்பதே அடுத்த வியூகம். இதை நோக்கியே பாமகவின் அடுத்த பயணம் இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.