தியானம் என்றால் என்ன?

ஒரு துறவியிடம் ஒருவர் தியானம் கற்க வந்தார். அவரிடம் அந்தத் துறவி “காட்டுக்குள் அமைதியாக அமர்ந்து அங்கே நீ என்னவெல்லாம் கேட்கிறாயோ அவற்றை என்னிடம் வந்து சொல்” என்று கூறி அனுப்பினார்.

தியானம் கற்க வந்த அந்த நபரும் அடர்ந்த காட்டுக்குள் சென்று அமர்ந்தார். ஓரிரு நாட்களில் மீண்டும் துறவியிடம் வந்து “காட்டுக்குள்ளே, மிருகங்களின் கர்ஜனைகளைக் கேட்டேன், பறவைகளின் இறைச்சலைக் கேட்டேன், மரம் செடிகொடிகள் மற்றும் சறுகுகள் காற்றில் ஆடுவதன் சப்தத்தைக் கேட்டேன்” என்கிறார்.

துறவியோ, “நீ தியானம் செய்ய இன்னும் ஆரம்பிக்கவில்லை. மனதை இன்னும் ஒரு நிலைப்படுத்தி இன்னும் அமைதியாக இன்னும் புதியனவாக என்னவெல்லாம் கேட்கிறாயோ அவற்றைச் சொல்” என்கிறார்.

மீண்டும் காட்டுக்குள் போய் அமர்ந்து புலன்களை கூர்மையாக்கி சூழலை உணரத் துவங்குகிறார் அந்த சீடர். சில நாட்களுக்குப் பின் துறவியிடம் திரும்பி வந்து “ஐயா! தூரத்தில் அருவித் தண்ணீர் கீழே விழும் சப்தத்தைக் கேட்டேன். காற்று கிளைகளுக்கிடையே ஓடிடும் சப்தத்தைக் கேட்டேன். எறும்புகள் ஊறும் சப்தத்தைக் கேட்டேன், மொட்டுக்கள் மலர்ந்திடும் சப்தம் கேட்டேன்” என்கிறார்.

துறவியோ இது போதாது மீண்டும் செல் என்கிறார். மீண்டும் சென்று பல நாட்கள் கழித்து திரும்பி வந்தவர் “இத்தனை நாள் காதில் கேட்க முடியாத மிகச்சிறிய சப்தங்களைக் கூட கேட்க முடிந்த நான் இந்த முறை எதையுமே கேட்கவில்லை. மனம் லயித்த நிலையில் என்னுள்ளேயே நான் இருந்து விட்டேன். என்னால் என் சூழலை உணரக்கூட முடியவில்லை. நான் முழுமையான நிசப்தத்தையே உணர்ந்தேன்” என்கிறார்.

துறவி கூறினார் “நீ தியானம் கற்றுக்கொண்டாய், இனி இதைத் தொடர்ந்து செய்துவா, உன்னை நீயே தரிசிப்பாய்” என்று கூறி ஆசிவழங்கி அனுப்பி வைத்தார்.

நசிகேதனுக்கு எமதர்மன் உபதேசித்த, மரணத்திற்கு பிறகு என்ற உபதேசத்தில் இடம் பெற்றுள்ள ஒரு குட்டி கதை.