திருமணம் குழந்தை வரம் அருளும் கழுகுமலை முருகன் ஆலயம்

ஒரு முகமும் ஆறு கரங்களும் கொண்ட முருக பெருமானின் குடைவரைக் கோவில். இத்தலம் கழுகுமலை, தென்பழனி, கழுகாசலம், உவணகிரி, கஜமுக பர்வதம், சம்பாதி ஷேத்திரம் என்று பல பெயர்களால் வழங்கப்படுகிறது. இது அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலம்

இக்கோவிலுக்கு விமானம் கிடையாது. சுற்றுப் பிராகாரமும் கிடையாது. மலையைச் சுற்றித்தான் பிரகார வலம் வரவேண்டும். கர்பக்கிரகமும் அர்த்த மண்டபமும் மலையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளன. கர்பக் கிரகத்தில் வள்ளி- தெய்வானையோடு முருகன் காட்சியளிக்கிறார்.

மற்ற கோவில்களில் உள்ளதுபோல முருகனின் வாகனமான மயில் வலது பக்கம் அல்லாமல் இடது பக்கம் நோக்கி காட்சி அளிப்பது தனிச்சிறப்பு

அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும்பொழுது இத்தலத்தில் தங்கி பூஜை செய்ததாகவும்; அகத்திய முனிவரின் இருப்பிடமான பொதிகை மலையை நோக்கி முருகன் தென்மேற்காக அமர்ந்துள்ளார் என்றும் கூறுவர்

கழுகாசலமூர்த்தி கோவில் அருகேயுள்ள மலையின் உச்சியில் பிள்ளையார் கோவிலும் இந்த கோவிலுக்குச்செல்லும் வழியில் சமண சிற்பங்களும் அருகில் ஒரு சுனையும் உள்ளன

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், மகாகவி சுப்ரமணிய பாரதியார், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், சிதம்பரகவிராயர் போன்றவர்கள் இங்கு வழிபட்டுள்ளனர்..

எண்ணற்ற மகான்களும் சித்தர்களும் தினமும் வழிபடும் இந்த திருத்தலத்தில் பல அதிசயங்களை நிகழ்த்தும் அற்புத சித்தர் பிரான் ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகள் ஜீவசமாதியும் உள்ளது.

ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி, மிகவும் அமானுஷ்ய அதிசயம் நிறைந்த அற்புதமான ஜீவசமாதியாகும். நேரில் சென்று தரிசனம் செய்யும் போது தான் அதன் மகிமையும் அங்குள்ள ஆற்றலும் நம்மை எப்படி ஆட்கொள்கிறது என்பது புரியும்..

ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகள், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி ஆனார் என்று சொல்லப்படுகிறது. இன்றும் சுவாமிகள் அங்கு நடமாடுவதாகவும் அவ்வப்போது சமாதியிலிருந்து வெளியே வந்து பேசுவதாகவும் கழுகு மலையை கிரிவலம் வருவதாகவும் நம்பப்படுகிறது.

திருமணம் வரம் வேண்டுவோர் ஒரு ரோஜா மாலையை இங்கு சுவாமிக்கு சாற்றி விளக்கேற்றி வழிபட விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை..

குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இங்கு வந்து எலுமிச்சை பழம் வாங்கி வந்து சமாதி பீடத்தில் வைத்து வழிபட்டு அத்துடம் சுவாமி நிவேதனம் செய்த மிளகாய் வற்றல்களை சேர்த்து எலுமிச்சை சாதம் செய்து அதில் இந்த மிளகாய் வற்றல்களை சேர்த்து சாப்பிட வேண்டும் என்பது இங்குள்ள நடைமுறை..