வெண்குஷ்ட நோயினை போக்கும் திருப்பேரெயில் ஜகதீசுவரர்

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள இத்தலம் 114வது தலமாகப் போற்றப் படுகிறது.
இறைவன்.ஜகதீசுவரர் என்ற திருநாமம் கொண்டும் இறைவி ஜகந்நாயகி என்ற பெயரிலும் அருள் பாலிக்கிறார்கள். இந்த ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.  திருநாவுக்கரசர்  தேவாரம் பாடிய பெருமை பெற்றது இக்கோயில்.
திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் கமலாபுரத்திற்கு அடுத்துள்ள மூலங்குடி சென்று இத்தலத்தை அடையலாம்.திருவாரூரில் இருந்து மாவூர் கூட்டுரோடு வடபாதிமங்கலம் சாலை வழியாகவும் இவ்வாலயத்துக்குச் செல்லலாம்.
இக்கோவில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் காட்சி தர, சிவ சிவ என வணங்கிக் கொண்டோம்.மூலவர் ஜகதீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியருளிக் கொட்டிருக்கிறாள்..
மூலவர் கருவறை கோஷ்டத்தில் எல்லா சிவாலயங்களிலும் இருப்பது போல தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருளிக்கொண்டு உள்ளனர்.
உள்பிரகாரத்தில் கற்பக விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், அய்யனார், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகளும் இருக்கின்றன.
இத்தலத்திலுள்ள நடராஜர் மிகவும் அழகான உருவத்துடன் காட்சி தருகிறார்.
ஆலயத்தின் தல மரமாக நாரத்தை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளன.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
வெண்குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.
சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் விளங்கியபோது அதைச்சார்ந்த கோட்டை இருந்தது என்றும், அக்கோட்டையின் அருகே எழுந்த ஊர் பேரெயிலூர், என்று பெயர் பெற்றதென்றும் அப்பெயரே மருவி பேரையூர் என்றாயிற்று என்பது ஆய்வாளர் கருத்து.
இவ்வூரில் தோன்றிய முறுவலார் என்னும் பெண்மணி பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும், புறநானுற்றிலும் இடம் பெற்றுள்ளன.
இத்தல முருகப்பெருமானுக்கு சித்திரை சஷ்டியில் திருவிழா நடக்கிறது.
அருள்மிகு ஜகதீசுவரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர்,
வடபாதி மங்கலம் அருகில் ,திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தினந்தோறும் காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும்
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.