காமமும் தாகமும் ஒன்றே!

ஒரு ஆஸ்ரமத்தில் சீடர்கள் தாங்களே எல்லா வேலைகளையும் செய்யும்படி இருக்கிறதே யாராவது உதவிக்கு இருந்தால் நன்றாக இருக்குமே என்று குருவிடம் போய் தங்கள் கருத்தினை சொன்னார்கள். குரு “அதெல்லாம் வேண்டாம். எல்லோரும் தங்களுக்கிடப்பட்டிருக்கும் வேலைகளைப் போய் ஒழுங்காகச் செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஆனால் சீடர்கள் விடவில்லை. திரும்பத்திரும்ப தினமும் இதையே கேட்பதுடன் வயதான பாட்டி ஒருத்தியையாவது இந்த வேலைகள் செய்ய சேர்த்துக் கொள்ளலாமே என்று யோசனை சொன்னார்கள் . குருவுக்கு வேறு வழி தெரியவில்லை.

ஒரு நாள் ஆஸ்ரம சமையல்காரரிடம் எல்லாருடைய சாப்பாட்டிலும் உப்பை நிறைய சேர்க்கும்படி குரு சொன்னார். சாப்பாடு முடிந்தவுடன் ஒரு அறையில் எல்லா சீடர்களையும் வைத்து வெளியில் பூட்டிவிட்டார். இரவு ஆக ஆக எல்லோருக்கும் தாகமெடுக்கத் தொடங்கியது. எவ்வளவோ பொறுத்துப் பார்த்தும் தாகத்தை அடக்கமுடியவில்லை. அந்த அறையின்மூலையில் ஒரு மண்பானையில் மறுநாள் காலை வாசல் தெளித்து மெழுகுவதற்காக சாணியைக் கரைத்த நீர் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார்கள். (இதுவும் குருவின் ஏற்பாடுதான்). ஒரு சீடன் மேலே தெளிந்திருந்த நீரைக் கொஞ்சமாய்க் குடித்தான். மற்றவர்களும் அவ்விதம் செய்ய கடைசியாக வந்த சீடர்கள் ‘ஏதோவொரு தண்ணீர் கிடைத்தால் சரி. தாகத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும்” என்ற எண்ணத்துடன் மொத்தத் தண்ணீரையும் குடித்துவிட்டார்கள்.

காலையில் குரு கதவைத் திறந்தார். மூலையில் இருந்த பானையில் தண்ணீரேயில்லை. அர்த்தபுஷ்டியான சிரிப்புடன் சீடர்களைப் பார்த்தார் . எல்லோரும் தலை கவிழ்ந்தனர். “தாகம் அதிகமாகும்போது தண்ணீரின் தரத்தைக் கூட பார்க்காமல் நீங்கள் மொத்த நீரையும் அருந்தியிருக்கிறீர்கள். காமமும் தாகமும் ஒன்றுதான். புரிந்ததா? ” என்று சொல்லி முடித்தார்.

சீடர்கள் குருவை வணங்கினர். மறு பேச்சு பேசவில்லை. ஒரு பெரிய உண்மையை உணர்ந்துகொண்ட மன நிறைவுடன் தங்களுக்காக காத்திருக்கும் வேலைகளைச் செய்யக் கிளம்பினர்.