சாபத்தையும் வரமாக்கும் இறையருள்

ராமாயணத்தில் வரும் சம்பவம்! ராமர், ராவணன் மீது போர் தொடுக்க முடிவெடுத்துப் பாலம் கட்ட ஆயத்த வேலைகளை ஆரம்பித்தார். சுக்ரீவனின் படையில் இருந்த நளனை அழைத்து எல்லோரிடமும் அறிமுகம் செய்தார்: “பாலம் கட்டுவதற்கான கற்கள் ஒவ்வொன்றையும் நளன் தொட்டுக் கொடுத்த பிறகே பயன்படுத்தவேண்டும்.: என்று சொல்லி முதல் கல்லை நளனின் கையில் கொடுத்தார். நளன் கைப் பட்டக் கல்லை கடலில் போட்டவுடன் மிதந்தது. அடுத்தடுத்து நளன் தொட்டுத்தந்த எல்லாக் கற்களும் கடலில் மிதந்தன. வானரங்கள் உள்பட எல்லோருக்கும் ஆச்சரியம்.

ராமபிரான் இதன் பின் உள்ள சூட்சுமத்தை விளக்கினார். நளன் ஒரு காலத்தில் முனிவர் ஒருவரிடம் சேவகம் செய்யும்போது நடந்த நிகழ்ச்சி இது. சாளக்கிராமப் பூஜை செய்வது முனிவரின் அன்றாட வழக்கம். சாளக்கிராமங்களைத் துடைத்து தூய்மைப் படுத்தி முனிவரிடம் தரும் பணி நளனுடையது. ஒவ்வொரு சாளக்கிரமமாகக் கொடுக்கையில் கைத் தவறி ஒரு சாளக்கிராமம் கடலில் விழுந்து விட்டது.

கோபம் கொண்ட முனிவர் “இனிமேல் உன் கைகளால் எந்தப் பொருளை நீரில் போட்டாலும் அது முழுகாது. மேலேயே மிதக்கும்” என்று சாபமிட்டு விட்டார். கோபம் கொண்டு முனிவரிட்ட சாபம் இப்போது ராமபிரானுக்கு உதவியது. அந்த சூட்சுமத்தை உணர்ந்திருந்த ராமபிரான் தனது பாலம் கட்டும் பணிக்கு இந்த சக்தியைப் பயன்படுத்திக் கொண்டார்.

ஆக முனிவரின் சாபமும், வேறு ஒரு தருணத்தில் லாபமாகியது. இதே அர்த்தத்தில்தான் பின்னர் வந்த வள்ளுவப் பெருந்தகையும் கூட : “ஊழையும் உப்பக்கங்காண்பர் உலைவின்றித் தாழாதுஞற்றுபவர்” என்ற குறளில் கூறியிருக்கிறார். அதாவது விதியாக ஒன்று வந்து சேர்ந்தாலும் இறையருள் கூட இணையுமேயானால் அதையும் நல்ல விதமாக வாழ்க்கைக்குப் பயனளிக்கும்படி செய்துகொள்ளலாம் என்பதே கருத்து.