இசை அமைப்பாளர்களின் துரோணர் தன்ராஜ் மாஸ்டர்

தமிழ் சினிமாவின் இசை வரலாற்றில் ராக ராஜாங்கம் நடத்திய ஆரம்ப கால இசை அமைப்பாளர்கள் முதல், ஏ.ஆர் ரகுமான் வரை பெரும்பாலானவர்களுக்கு, கர்நாடகம் மற்றும் மேற்கத்திய இசை நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தவர் தன்ராஜ் மாஸ்டர்.

அவரிடம் இசை பயின்ற இசை ஞானி இளையராஜா, பல முக்கியப் பேட்டிகளில் தன்ராஜ் மாஸ்டரைப் பற்றி பல விஷயங்களைக் கூறியுள்ளார். அதேபோல் ஏ.ஆர்.ரகுமானும், தமது எட்டாவது வயதில் இருந்து தன்ராஜ் மாஸ்டரிடம் கிடார் கற்க ஆரம்பித்தார். ஸ்லம் டாக் மில்லியனேயர் படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றபோது, அவர் இதை நினைவு கூர்ந்தார்.

தன்ராஜ் மாஸ்டரின் தந்தை கோவிந்தராஜ்.  அவர், கர்ணாமிர்த சாகரம் என்னும் புகழ் பெற்ற இசை நூலை எழுதிய தஞ்சை ஆபிரகாம் பண்டிதரிடம் உதவியாளராக இருந்தார்.

அப்போது, ஆப்ரஹாம் பண்டிதரின் மகன் ஜோதி பாண்டியனுக்கும் தன்ராஜ் மாஸ்டருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. அப்படியே இசையில் நல்ல தேர்ச்சி பெற்றார் தன்ராஜ் மாஸ்டர்.

பின்னர், மைசூர் மகாராஜா அரண்மனையில் மேற்கத்திய இசைக் கச்சேரி நடத்தி வந்த ஜெர்மன் இசைக்குழுவில் சேர்ந்து சில ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது, மேற்கத்திய இசை நுணுக்கங்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டார். ஜெர்மன் குழு இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னர், அவர் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

சென்னையில், வந்து சேர்ந்த தன்ராஜ் மாஸ்டரருக்கு ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆதரவு அளித்தார். அவர் தயாரித்த சந்திரலேகா படத்தின் இசை அமைப்பில் தன்ராஜ் மாஸ்டருக்கு முக்கியப்பங்கு இருந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ, தன்ராஜ் மாஸ்டரின் பெயர் படத்தில் இடம் பெறவில்லை. அதே போல் 1954-ல் வெளிவந்த ராஜி என் கண்மணி படத்திலும் அவரது பெயர் இடம் பெறவில்லை.

அதன் பின்னர் அவர், லஸ் கார்னரில் உள்ள சாய் லாட்ஜில் நிரந்தரமாகத் தங்கி விட்டார். பல நேரம் அவர் போதையில்தான் இருப்பார், தனித்து இருப்பார், மிகவும் கோபக்காரர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.

வாயில் எப்போதும் சுருட்டு அல்லது சார்மினார் சிகரட் புகைந்து கொண்டே இருக்கும். நடுத்தர உயரம், சாதாரண உடல் வாகு, மாநிறம். அவர் இணக்கமாகப் பேசும்போதெல்லாம், அவர் ஒரு ஹாக்கி விளையாட்டு வீரர் என்பதை நினைவு படுத்துவதாக இருக்கும்.

மிகப்பெரிய இசை அமைப்பாளர்களும் அவர் எதிரே கை கட்டிதான் நிற்பார்கள். ஆனால் அவர் அதை விரும்புவதோ, ரசிப்பதோ இல்லை என்று இசை விமர்சகர் வாமணன் தமது திரை இசை அலைகள் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கிடார் இசையும், ட்ரம்ஸ் ஒலியும், பியானோவின் மெல்லோசைகளும் அந்த அறையில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கும். அந்தக் காலத்தில், திரை வாத்தியக் கலைஞர்கள் பலரும், அந்தப் படிகளில் எறியவர்கள்தான். அந்த வரிசையில் ஒருவர்தான் இளையராஜா.

சென்னையில் வாய்ப்பு தேடி, இளையராஜா சந்தித்த அவமானங்கள், அவமதிப்புகள், வறுமை, நெருக்கடி ஆகிய துன்பங்களுக்கு மத்தியில்தான், அவர் தன்ராஜ் மாஸ்டரை சந்தித்தார்.

வருமானம் இல்லாத நிலையில் இருந்த என்னிடம் தன்ராஜ் மாஸ்டர் பணமே வாங்கவில்லை. இசையின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுத்தந்தார். பியானோ கற்றுக் கொள்வதற்காக நான் அவரிடம் சேர்ந்தேன். எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட அவர், அதைக் கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்….

வாரத்தில் இரண்டு நாள், இரண்டு மணி நேரம் பயிற்சி பெற சேர்ந்திருந்த நான், தினமும் வருகிறேன் என்றேன். சரி வா என்றார். என்று சங்கீத கனவுகளில் தன்ராஜ் மாஸ்டர் பற்றி இளையராஜா நினைவு கூர்ந்துள்ளார்.

ராசையா என்ற பெயரை ராஜா என்று மாற்றியவரும் தன்ராஜ் மாஸ்டரே. பின்னர் அன்னக்கிளி படத்துக்கு இசை அமைக்கும் போதுதான், அதை இளையராஜா என்று பஞ்சு அருணாசலம் மாற்றினார்.

ஆஸ்கார் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும், தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்றவரே. இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

150 ஆண்டு கால பாரம்பரியம் உள்ள லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியின் ஆசிரியரும், 28 முறை சிறந்த இசைப் பயிற்சி ஆசிரியர் விருதைப் பெற்றவருமான அப்துல் சத்தாரும், இளையராஜாவுடன் சேர்ந்து தன்ராஜ் மாஸ்டரிடம் இசைப் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பலருக்கு இசை கற்றுக் கொடுத்ததுடன், வருங்கால தலை முறையும் பயன் பெறும் வகையில் இசை வழி 180 டிகிரி, பிரம்ம மேள பிரமாணம் என்ற இரு இசை நூல்களையும் எழுதியுள்ளார். இவை இரண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.