கூந்தல் வளர்ச்சிக்கு இயற்கை சீயக்காய் ஷாம்பூ

என்னதான் இயற்கையான சீயக்காய் தூள், ஷாம்பூ என்று வந்தாலும், அது எந்த அளவுக்கு இயற்கை தன்மை நிறைந்துள்ளது, ரசாயன கலப்பு இல்லாதது என்று உறுதி கூற முடியாது.

எனவே, இயற்கையான சீயக்காய் ஷாம்புவை நாமே தயாரித்து கொள்ளலாம். அதற்காக எந்தெந்த பொருட்களை சேர்த்து, எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: சீயக்காய் ஒரு கிலோ, செம்பருத்தி பூ ஐம்பது, பூலாங்கிழங்கு நூறு கிராம், காய வைத்த எலுமிச்சை தோல் இருபத்தைந்து, பாசிப்பருப்பு கால் கிலோ, காயவைத்த மல்லிகைப்பூ இருநூறு கிராம், மரிக்கொழுந்து இருபது குச்சிகள், கரிசலாங்கண்ணி இலை மூன்று கப்.

மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காயவைத்து, அரவை மில்லில் கொடுத்து அரைத்துக் கொண்டால் இயற்கை சீயக்காய் ஷாம்பூ தயார். இந்த பவுடரில் கொஞ்சம் தண்ணீரை மட்டும் கலந்து பேஸ்ட் போல கலந்து ஷாம்புக்கு பதில் பயன்படுத்தலாம்.

இந்த சீயக்காய் ஷாம்பில் இருந்து அதிக நுரை வரும். முடிகளின் வறட்சி குறைந்து முடி ஒடிவது குறையும். முடி கருமையாக வளருவதுடன், இதில் கலந்துள்ள பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. பக்க விளைவுகளும் இல்லாதவை.

சீயக்காய் சிறந்த கிருமி நாசினியாக விளங்குவதுடன், முடியில் இயல்பான எண்ணெய் தன்மையை தக்க வைத்துக்கொள்ளும். பொடுகை தடுக்கும்.

செம்பருத்தி முடி உதிர்வை தடுப்பதுடன், இளநரை, பொடுகு போன்றவற்றை கட்டுப்படுத்தும். முடிக்கு தேவையான வலிமையையும் தரும்.

எலுமிச்சை தோல் கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்களை தரும். பாசிப்பயிறு முடி உடைதல், முடி உதிர்தல் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.

மரிக்கொழுந்தில் உள்ள நறுமண எண்ணெய் முடிக்கு வலிமை சேர்க்கும். மல்லிகை பூவில் உள்ள சத்துக்கள் முடி உதிர்தலை தடுப்பதுடன், பேனையும் அழிக்கும் தன்மை கொண்டது. கரிசலாங்கண்ணி முடியின் வேர் பகுதியை பாதுகாக்கும்.