ரசாயன கலப்பில்லாத குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

வாசனை சோப்புகள் மற்றும் பவுடர்கள் சிலருக்கு உடலில் அலர்ஜியை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் சருமம் பாதிப்பு அடைகிறது. இதனால், இளம் வயதிலேயே முகச்சுருக்கம், தோல்சுருக்கம் போன்றவை ஏற்படுகின்றன.

இதன் காரணமாக சருமம் பாதிக்காத வகையில் இயற்கை மூலிகைகள் கொண்ட குளியல் பொடிகளை நாமே தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: சோம்பு நூறு கிராம், கஸ்தூரி மஞ்சள் நூறு கிராம், வெட்டி வேர் இருநூறு கிராம், அகில் கட்டை இருநூறு கிராம், சந்தனத்தூள் முன்னூறு கிராம், கார்போக அரிசி இருநூறு கிராம், தும்மராஷ்டம் இருநூறு கிராம், விலாமிச்சை இருநூறு கிராம், கோரைக்கிழங்கு இருநூறு கிராம், கோஷ்டம் இருநூறு கிராம், ஏலரிசி இருநூறு கிராம், பாசிப்பயிறு அரை கிலோ.

இவற்றை தனித்தனியாக காய வைத்து, தனித்தனியாக அரைத்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் கொஞ்சம் எடுத்து தினமும் குளிக்கும்போது, தண்ணீரில் குழைத்து உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால், உடல் முழுவதும் நறுமணம் வீசும்.

தொடர்ந்து குளித்து வந்தால், சொறி சிரங்கு, தேமல், படர் தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களின் கரு வளையம், முகப்பரு, கருந்திட்டு போன்றவற்றிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும்.

மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.