சென்னையை சுற்றியுள்ள பஞ்சபூத ஸ்தலங்கள்

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் என்ற தத்துவத்தின் அடிப்படையில், நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களால் இயங்குவதே உலகம். அந்த அடிப்படையில் உலக உயிர்கள் அனைத்தும் பஞ்ச பூதங்கள் சேர்க்கையால் உருவாகி இயங்கி வருகின்றன.

இதை உணர்த்தும் வகையில், பஞ்சபூதங்களுக்கு உரிய சிவாலயங்கள் தமிழகத்திலும் ஆந்திர மாநிலத்திலும் அமைந்துள்ளன. இங்குள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.

அதன்படி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள பிருத்வி லிங்கம் நிலத்தை குறிக்கும் தளமாகும். திருவண்ணாமலையில் உள்ள அக்னி லிங்கம் அல்லது ஜோதிலிங்கம் நெருப்பையும், திருவானைக்காவல் அப்புலிங்கம் என்ற ஜம்புலிங்கம் நீரையும் குறிக்கின்றன. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள லயங்கள் ஆகாயத்தை குறிக்கின்றது. ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள வாயு லிங்கம் காற்றை குறிக்கின்றது.

இந்த ஆலயங்களில் சென்று வழிபடுவது மிகுந்த நன்மையை தரும். இவ்வாறு, அந்த பஞ்சபூதங்களையும் தரிசிக்க முடியாத சென்னையில் உள்ள பக்தர்கள், சென்னையில் உள்ள பஞ்சபூத லிங்கங்களையும் தரிசிக்கலாம்.

அதன்படி, பூமி லிங்கத்தை தரிசிக்க விரும்புவோர், சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் மின்ட் தெருவில் உள்ள எகாம்பரேஸ்வரரை தரிசிக்கலாம். அல்லது, அமைந்தகரை மற்றும் கோவிலாம்பாக்கம் அருகே நன்மங்கலத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தை தரிசனம் செய்யலாம்.

அப்புலிங்கம் என்னும் நீர் லிங்கத்தை தரிசிக்க விரும்புவோர், சென்னையை அடுத்த திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு சாலையில், பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்பாக்கம் என்ற இடத்தில் உள்ள ஜம்புகேஸ்வரரை தரிசிக்கலாம்.

அக்னிலிங்கம் எனப்படும் நெருப்பு லிங்கத்தை தரிசிக்க விரும்புவோர், சென்னை தண்டையார்பேட்டை, லக்ஷ்மி அம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தை வழிபடலாம்.

வாயு லிங்கத்தை தரிசிக்க விரும்புவோர், சென்னை பாரிமுனை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில், பவழக்கார தெருவில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தை தரிசிக்கலாம்.

ஆகாய லிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டுமானால், சென்னை சூளையில் உள்ள சிதம்பரேஸ்வரர் ஆலயத்தை தரிசனம் செய்யலாம்.