விசாக நட்சத்திர பலன்கள்

ஏழை பணக்காரன் என்ற வித்யாசம் பாராமல், அனைவரையும் சமமாக பாவிக்கும் தன்மை கொண்டவர்கள் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

தமிழ் கடவுள் முருக பெருமான் அவதரித்த நட்சத்திரம் என்ற சிறப்பை பெற்றது விசாக நட்சத்திரம். ஆழ்ந்த சிந்தனையும், அகன்ற அணுகு முறையும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணமாக இருக்கும்.

தி, து, தே, தோ போன்ற எழுத்துக்கள் பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் விசாக நட்சத்திரத்தின் தன்மை கொண்டவர்கள் ஆவர்.

குருவின் நட்சத்திரமான  விசாக நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள், சுக்கிரனுக்கு உரிய துலாம் ராசியிலும், எஞ்சிய ஒரு பாதம் செவ்வாய்க்கு உரிய விருச்சிக ராசியிலும் இடம் பெற்றுள்ளதால், தெளிவான அறிவும், விடா முயற்சியும் இவர்களிடம் நிறைந்திருக்கும்.

இவர்கள் ஆண்மையும், அறிவுத்திறனும் நிறைந்தவர்கள். நல்ல தெய்வ பக்தி உண்டு. வாழ்க்கையில் உண்மை தன்மையை கடைபிடிப்பார்கள்.

பழங்கால பழக்க வழக்கங்களைவிட நாகரீக பழக்க வழக்கங்களை அதிகம் விரும்புவார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர், தங்கள் பிறந்த இடத்தில் இருந்து, வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து சென்று வசிக்கும் நிலையில் இருப்பார்கள்.

மற்றவர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பார்கள். அதே சமயம் அவர்கள் சொல்லும் கருத்தை கண்மூடி தனமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடவுள் பக்தி அதிகம் இருந்தாலும், மூட நம்பிக்கைகளை வெறுப்பார்கள்.

அனைவரையும் சமமாக பாவிக்கும் பண்பு இவர்களுக்கு உண்டு. அதேசமயம், பிடித்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதும், பிடிக்கவில்லை என்றால் கீழே போட்டு உடைக்கும் குணமும் இவர்களிடம் இருக்கும்.

வயதில் மூத்தோரிடம் காதல் வயப்படுவது விசாக நட்சத்திரத்தின் குணம்.

அவசியமான செலவுகளுக்கு கணக்கு பார்க்கும் சிலர், அனாவசியமான செலவுகளுக்கு கணக்கு பார்க்க மாட்டார்கள். வயது ஏற, ஏற ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

விசாக நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், இனிமையாக பேசுவார்கள். வீட்டிலும், வேலையிலும் இவர்களது நிர்வாக திறமை பளிச்சிடும். எளிமையாகவும், கர்வம் இல்லாமலும் இருப்பார்கள். பெரிய அளவுக்கு தன்னை அலங்காரப்படுத்திக் கொள்வதில் விருப்பம் இருக்காது. ஆனால், இயற்கையிலேயே அழகாக இருப்பார்கள். பூஜை, புனஸ்காரங்களில் அதிக நம்பிக்கை இருக்கும்.

விசாக நட்சத்திரத்தில் நின்ற கிரகம், மத்திய வயதில் இறந்தவர்கள், நாய்கடி பட்டவர்கள், காணாமல் போனவர்கள், அடுத்த பிறவி போன்றவற்றை சொல்லும்.

விசாக நட்சத்திரத்தின் அதிதேவதை, ஸ்ரீ முருகன் மற்றும் காளியம்மன். பரிகார தெய்வம் சிவன். காசியில் உள்ள நந்தீஸ்வரர், மயிலாடுதுறையில் உள்ள குதம்பை சித்தர், எட்டுக்குடி அழுகண்ணி சித்தர் ஆகியோரின் ஜீவ சமாதிகளையும் வணங்கலாம். வழிபாட்டுக்கு உகந்த மலர் இருவாட்சி மலர்.

விசாக நட்சத்திரம் முறம், தோரணம், பானை செய்யும் சக்கரம் போன்ற வடிவங்களில் காணப்படுவதால், இந்த வடிவங்களை, விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கான லோகோவாக பயன்படுத்தலாம்.

ராட்சத கணம் கொண்ட இந்த நட்சத்திரத்தின் விருட்சம் விளா மரம். எனவே, விசாக நட்சத்திரக்காரர்கள் விளா மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.

இதற்கான மிருகம் பெண் புலி, பறவை பச்சைக்கிளி. எனவே இவற்றுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது நல்லது.

செங்கோட்டை அருகில் உள்ள பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோயிலே, விசாக நட்சத்திரத்திற்கான ஆலயமாகும். இந்த ஆலயத்தில் தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று விசாக நட்சத்திர காரர்கள் வழிபாடு செய்வது நல்லது.

விசாக நட்சத்திரத்தினர் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள அன்னதானம் செய்வது நல்லது.