உத்திரட்டாதி நட்சத்திர பலன்கள்

மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருப்பதுடன், தம்மை நம்பி வந்தவர்களை காப்பாற்றும் குணமும் கொண்டவர்கள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

து, ச, த போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும், உத்திரட்டாதி நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.

சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதி குருவின் வீடான மீனத்தில் அமைந்துள்ளதால், எடுத்துக்கொண்ட காரியத்தில் உறுதியும், மற்றவர்களை வழி நடத்துவதிலும் இவர்கள் முதன்மையாக திகழ்வார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஏழை பணக்காரன் என்ற ஏற்ற தாழ்வு பாராமல், அனைவரையும் பாரபட்சம் இல்லாமல் அணுகும் தன்மை உள்ளவர்கள்.

கள்ளம் கபடம் இல்லாத இதயம் இருக்கும். முடிந்தவரை மற்றவர்களுக்கு தொல்லை தராமல் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களின் கோபம் நீண்ட நேரம் நீடிக்காது.

இவர்களிடம் அன்பு செலுத்துபவர்கள் மற்றும் நம்பி வந்தவர்களுக்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். இவர்களின் உணர்வுகளை காயப்படுத்தி விட்டால், சிங்கம் போல பொங்கி எழுந்து விடுவார்கள்.

இவர்களிடம் அறிவுத்திறனும், விவேகமும் நிறைந்திருக்கும். கவர்ச்சிகரமாக பேசுவதில் சாமர்த்தியம் உள்ளவர்கள். எதிரிகளை வெல்லும் குணமும் இருக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், வீட்டுக்கும் குடும்பத்திற்கும் ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். இவர்களுடைய நடவடிக்கை அனைத்தும், மற்றவர்கள் புகழும்படி இருக்கும். அனைவரிடமும், பணிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வார்கள். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தன்னை தயார்படுத்தி கொள்வார்கள். மற்றவர்களை பற்றியும் கவலைப் படுவார்கள். முடிந்தவரை உதவி செய்வார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நின்ற கிரகம்,  சுய தொழில் முன்னேற்றத்தில் உள்ள ஆர்வம், இரண்டு திருமணம் முடித்தவர்கள், ஒரு தொழிலை விட்டு வேறு தொழில், ஒரு இடத்தை விட்டு வேறு இடம் மாறுவதையும் சொல்லும்.

உத்திரட்டாதி நட்சத்திரம் கட்டில் கால்கள், இரட்டையர்கள் போன்ற வடிவத்தில் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கு இவற்றை லோகோவாக பயன்படுத்தலாம்.

மனுஷ கணம் கொண்ட உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை மகா ஈஸ்வரர், காமதேனு. பரிகார தெய்வம் துர்கை. மதுரை சுந்தரானந்தர், திருப்பரங்குன்றம் மச்சமுனி ஆகியோரின் ஜீவ சமாதிகளையும் வணங்கலாம். உகந்த மலர் நதியாவட்டை.

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் விருட்சம் வேம்பு. எனவே உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வேப்ப மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.

இதற்குரிய மிருகம் பசு, பறவை கோட்டான். எனவே இவற்றுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது நல்லது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அருகே தீயத்தூரில் அமைந்துள்ள சகஸ்ர லட்சுமீஸ்வரர் உடனுறை பெரியநாயகி ஆலயமே, உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாகும்.

எனவே தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று, உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள் இந்த ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.

உத்திரட்டாதி நட்சத்திரகாரர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, வெள்ளாடு தானம் செய்வது நல்லது.