வீரமும் விவேகமும் நிறைந்த தனுசு ராசி

தனுசு ராசி என்பது குருஷேத்திர போர் நடந்த இடத்தையும், பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதை உபதேசம் செய்ததையும் குறிக்கும் ராசி. அதேபோல ஆஞ்சநேயர் பிறந்த ராசியும் கூட.

மூலம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள், பூராடம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள், மற்றும் உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் தனுசு ராசியை சேர்ந்தவர்கள்.

தனுசு ராசியில் பிறந்த பலர் மற்றவர்களுக்கு நல்ல ஆலோசனைகளையும், உபதேசங்களையும், போர் பயிற்சிகளையும் வழங்குவார்கள்.

ஆனால், மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகளையும், உபதேசங்களையும்   இவர்கள் கேட்க மாட்டார்கள்.

தனுசு ராசிக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே கோவில், மசூதி, தேவாலயம், கல்லறை, சுடுகாடு, உடற்பயிற்சி கூடம், நிதி நிறுவனம் போன்ற ஏதாவது ஒன்று இருக்கும்.

என்றாவது ஒரு நாள், இவர்கள் வீட்டிற்கு குரங்குகள் வந்து போகும். அதாவது இவர்களுக்கு ஆஞ்சநேயர் தரிசனம் கிடைக்கும்.

ஆஞ்சநேயர் கடைசி வரை, ஸ்ரீராமரையே சார்ந்து இருந்ததால், தனுசு ராசியில் பிறந்த பலர், தனித்து நின்று வெற்றி பெறுவது மிகவும் சிரமம்.

கூடுமானவரை தனுசு ராசியில் பிறந்த பலர், மிகப்பெரிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களை சார்ந்து வாழ்பவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு தளபதியாகவும், விசுவாசியாகவும் இருப்பார்கள்.

சிலர், தனித்து நின்று போராடி வெற்றி பெற்று சாதனை படைத்தால், அந்த சாதனையானது, தலைமுறைகளை கடந்தும் பேசப்படுவதாக இருக்கும்.

தனுசு ராசிக்கு, பிரகஸ்பதியான குருவே அதிபதியாக வருவதால், இவர்களுக்கு அறிவுத் திறன் சற்று அதிகமாக இருக்கும். ஆனாலும், அதை தனக்காக பயன்படுத்தி முன்னுக்கு வருவதை விட, மற்றவர்களுக்கு பயன்படுத்துவதையே விரும்புவார்கள்.

இவர்கள் உடல் மற்றும் மன வலிமை மிகுந்தவர்களாக இருந்தாலும், இவர்களுக்கு பின்னால், யாராவது ஒருவர் இருந்தால் மட்டுமே, தைரியமாக இறங்கி களம் காணுவார்கள்.

தனுசு ராசியின் அடையாளம் வில்-அம்பு என்பதால், இவர்கள் எப்போதும், ஏதாவது ஒரு குறிக்கோளுடன்தான் இயங்கிக்கொண்டு இருப்பார்கள்.

குரு ஆதிக்கம் மிகுந்த இவர்கள், இனிப்பு மற்றும் பருப்பு வகைகளை விரும்பி உண்ணுவார்கள், அதன் காரணமாக, வாயு மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

வீடு, மனை, வாகனம் போன்றவை, இவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அமையாது. அப்படியே அமைந்தாலும், இவர்கள் அதில் திருப்தி அடைவதில்லை.

இவர்களிடம் எப்போதும் அறிவு சம்பந்தப்பட்ட தேடல் அதிகமாக இருக்கும். அதே போல், மற்றவர்களின் கருத்துக்களை உள்வாங்கி, தேவையான இடத்தில் பயன்படுத்தும் பழக்கமும் இவர்களுக்கு உண்டு.

இவர்கள், தங்களது தனித்தன்மையை நிலை நாட்ட தொடர்ந்து போராடி வருவார்கள். குடும்பம் மற்றும் சகோதர வழியில் பெரிய அளவில் திருப்தி கிடைக்காது.

சிலருக்கு தாமதமாக குழந்தை பிறக்கும். குழந்தைகளுக்காக அதிக செலவுகள் செய்ய நேரும். சிலரது குழந்தைகள், வெளிநாட்டில் வசிக்கும் நிலையிலும் இருப்பார்கள்.

இவர்கள், பெரிய அளவில் கடன் வாங்கி எதையும் செய்யக்கூடாது. கடன் வாங்கினால், அதை உடனுக்குடன் அடைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அந்த கடன் பெருகிக்கொண்டே போகும்.

முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால், கடன், வழக்கு, நோய் பாதிப்புகளில் இருந்து, மீண்டு வருவது உறுதி.

சிலருக்கு, தந்தையின் சொத்துக்களும், அவருடைய ஆதரவும் முழுமையாக கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் நல்ல ஈடுபாடு இருக்கும்.

மொத்தத்தில் தனுசு ராசியில் பிறந்தவர்கள், ராமருக்கு அனுமனைப்போல, தாம் சார்ந்திருப்பவர்களுக்கு நல்ல தளபதியாகவும், விசுவாசியாகவும் இருப்பார்கள்.

தடைகள் அகல – அதிர்ஷ்டம் பெருக

தனுசு ராசிக்காரர்கள் தங்களது அதிர்ஷ்டத்தை பெருக்கிக் கொள்ள சூரியனுக்கு உரிய ஆரஞ்சு நிற துணியை கைக்குட்டையாக பயன்படுத்தலாம்.

தடைகள் மற்றும் இடையூறுகள் அகல, புதனுக்கு உரிய பச்சை நிற ரிப்பனை புதன் கிழமைகளில், கத்தரி கோலால் துண்டு துண்டாக வெட்டி போடலாம்.

செம்பு நாணயங்களை 43 நாட்கள் தொடர்ந்து ஓடும் நீரில் விட துரதிர்ஷ்டம் நீங்கும் என்று லால் கிதாப் கூறுகிறது.

மேலும், தந்தையின் படுக்கை ஆடைகள், உடைகள் அதிர்ஷ்டம் தரும்.

பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் இயன்றதை தானம் செய்யவும்.

திங்கள் கிழமைகளில் கோவில்களுக்கு நெய், தயிர் அல்லது கற்பூரம் வாங்கி தருவது நல்லது.

வீட்டின் முன் பகுதியில் மஞ்சள் நிற பூ பூக்கும் செடிகளை வைப்பது நல்லது. அரசமரப் பிரதட்சன வழிபாடு நல்ல பலனை தரும்.

வாழ்வில் ஒரு முறையாவது, ஹரிதுவார் சென்று வழிபாடு செய்வது நல்லது.

இவை அனைத்தும் தனுசு ராசிக்கான பொதுவான பலன்களே. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

என்ன நண்பர்களே, இது போல மற்ற ராசிகளுக்கான பலன்களையும் காண Virgo News இணைய தளத்தை பாருங்கள்.  இந்த பலன்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் Virgo News பக்கத்தை லைக் பண்ணுங்கள், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்கள். நன்றி. வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *