புனர்பூச நட்சத்திர பலன்கள்

இயல்பிலேயே தர்ம நியாயங்களை பின்பற்றி, ஒழுக்கமாக நடந்து கொள்ளும் தன்மை உள்ளவர்கள் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

ஸ்ரீராமர் அவதரித்த நட்சத்திரம் என்ற சிறப்பை பெற்றது புனர்பூச நட்சத்திரம் ஆகும். கே, கோ, ஹ, ஹி என்ற எழுத்துக்கள், முதல் எழுத்துக்களை கொண்ட பெயர்கள் உள்ளவர்களும், புனர்பூச நட்சத்திரத்தின் ஆதிக்கம் பெற்றவர்கள் ஆவர்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கடவுள் பக்தி மற்றும் மத கோட்பாடுகளில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்து போகும் தன்மையும் இவர்களிடம் உண்டு.

இயல்பிலேயே தர்ம நியாயங்களை பின்பற்றி ஒழுக்கமாக நடந்து கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். கேள்வி ஞானம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களின் நல்ல நடத்தை சில நேரங்களில் போகப்போக மாறிவிடும். அதனால், இவர்களை யூகித்து அறிவது மிகவும் கடினம். இவர்களின் உள்மனதில் உள்ளதை அறிவது முடியாத காரியம் ஆகும்.

எதுவும் இல்லை என்று கவலைப்படாமல், இருப்பதை கொண்டு திருப்தியாக வாழும் மனநிலை கொண்டவர்கள், எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மையும், சடங்கு சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடும் இருக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட விரும்ப மாட்டார்கள். மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள்.

எளிமையான வாழ்க்கையும், பிறருக்கு தீங்கு இழைக்காத குணமும், முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவும் பண்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சில நேரங்களில் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள்.

ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வது இவர்களின் பழக்கமாக இருக்கும். சிலருக்கு தற்பெருமை பேசுவது மிகவும் பிடிக்கும்.

நடை பயிற்சி செய்வதிலும், பழம் சாப்பிடுவதிலும் இவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். சுகமான சவுகரியமான வாழ்க்கையும், பிறரிடம் வேலை வாங்கும் நிர்வாக திறனும் இவர்களிடம் மிகுந்து காணப்படும். எதிரியாக இருந்தாலும், அவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பார்கள்.

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சாந்தமாக இருப்பார்கள். இருந்தாலும், சில நேரங்களில் இவர்களின் பேச்சும், செயல்களும் மற்றவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். இவர்கள், அண்டை வீட்டாருடன் சுமூகமாக நடந்து கொள்வது அரிது.

புனர்பூச நட்சத்திரம் வில் மற்றும் அம்புக்கூடு போன்ற தோற்றம் கொண்டதால், இவற்றை தொழில் செய்பவர்கள் லோகோவாக பயன்படுத்தலாம்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் நின்ற கிரகம், காணாமல் போனவர்களையும்,  குழந்தைகள் பிரிந்து போவதையும் சொல்லும்.

புனர்பூசம் தேவ கண நட்சத்திரம் ஆகும். இதன் அதிதேவதை அதிதி. பரிகார தெய்வம் சிவன். வைதீஸ்வரன் கோவிலில் உள்ள, தன்வந்திரி மற்றும் வசிஷ்டர் ஜீவ சமாதியையும், வழிபடலாம். இந்த நட்சத்திரத்திற்கு உகந்த மலர் மரிக்கொழுந்து.

புனர்பூசத்திற்கு உரிய  விருட்சம் மூங்கில். எனவே மூங்கில் மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது. மிருகம் பெண் பூனை, பறவை அன்னப்பறவை. இவற்றுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது நல்லது.

வாணியம்பாடி அதிதீஸ்வரர் உடனுறை பெரியநாயகி ஆலயம், புனர்பூச நட்சத்திரத்திற்கு உரிய தலமாகும். இங்கு புனர்பூச நட்சத்திரம் அன்று வழிபாடு செய்வது நல்லது.

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள அன்னதானம் செய்வது நல்லது.