மூல நட்சத்திர பலன்கள்

ஏற்றுக்கொண்ட தலைமைக்கு எப்போதும் விசுவாசமாக நடந்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

ஸ்ரீ ராமரின் பக்தனான ஹனுமன் அவதரித்த நட்சத்திரமாக கூறப்படுவது மூலம். எதையும், அதன் அடி நாதம் வரை சென்று ஆராயும்  தன்மை மூல நட்சத்திரத்திற்கு உண்டு.

யே, யோ, ப, பி போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும், மூல நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.

கேதுக்கு உரிய மூல நட்சத்திரம் குருவின் வீடான தனுசில் இருப்பதால், இவர்களுக்கு ஆழ்ந்த ஆன்மீக சிந்தனையும், நுணுக்கமான அணுகுமுறையும் நிறைந்து இருக்கும்.

மூல  நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறிக்கோளுடன் செயல்படுவார்கள்.

இவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரும். அது இவர்களுடன் பழகுபவர்களையும்  பாதிக்கும்.ஆனாலும், எல்லா தடைகளையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வெற்றி காண்பார்கள்.

எதிர்காலத்தை பற்றிய இவர்களது கவலையை ஆண்டவனிடம் ஒப்படைப்பது இவர்களின்  இயல்பு.

வரவு செலவு விவகாரத்தில் கட்டுப்பாடுகள் இல்லாததால், அவ்வப்போது கஷ்டங்களை சந்திக்க நேரும். இவர்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதை விரும்புவார்கள். ஆனால், இவர்களே அதை பின்பற்ற மாட்டார்கள்.

தொழிலில் அடிக்கடி மாற்றத்தை சந்திக்க வேண்டி வரும். நண்பர்களுக்காக தன்னுடைய வருமானத்தை அதிகம் செலவு செய்வார்கள்.

ஸ்ரீ ராமரிடம் அனுமன் தன்னை ஒப்படைத்தது போல, இவர்களும் இவர்கள் தங்கள் திறமை, ஆற்றல் அனைத்தையும் தங்கள் எஜமானர்களுக்கு ஒப்படைப்பவர்களாக இருப்பார்கள்.

மூல நட்சத்திரத்தில் பிறந்த பலர் தனித்து இயங்கும் தன்மை இல்லாதவர்களாக இருப்பார்கள். அதனால், வசதியானவர்கள், தொழிலதிபர்கள்,  அரசியலில் உயர் பதவியில் இருப்பவர்கள் என யாரையாவது சார்ந்தே இவர்களது வாழ்க்கை செல்லும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், பொது நிறத்துடன் இருப்பார்கள். கள்ளம் கபடம் இல்லாமல் இருப்பார்கள். பிடிவாத குணம் இருப்பதால், மற்றவர்களை கையாள முடியாத நிலை ஏற்படும். அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரும். பொதுவாக மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு மன வாழ்க்கை சரியாக அமைவதில்லை. அப்படி அமைந்தாலும் நிலைப்பதில்லை.

மூல நட்சத்திரத்தில் நின்ற கிரகம், திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆகியும் பிரிந்து இருப்பவர்கள், மன வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள், விபத்தில் சிக்கியவர்கள் போன்றவற்றை குறிக்கும்.

மூல நட்சத்திரமானது  அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் தும்பிக்கை போன்ற வடிவங்களில் இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இவற்றை தங்கள் தொழில் மற்றும் வணிகங்களுக்கு லோகாவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ராட்சத கணம் கொண்ட மூல நட்சத்திரத்தின் அதிதேவதை ஆஞ்சநேயர் மற்றும் சிவன். பரிகார தெய்வம் விநாயகர். ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ பதஞ்சலி சித்தர் ஜீவ சமாதியையும் வணங்கலாம். உகந்த மலர் வெண்சங்கு.

மூல நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் மரா மரம். எனவே கோவில் மற்றும் இதர இடங்களில் உள்ள மரா மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது சிறப்பு.

இந்த நட்சத்திரத்திற்கான மிருகம் பெண் நாய், பறவை செம்போத்து. எனவே இவற்றுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது.

தக்கோலம் அருகே உள்ள மப்பேடு சிங்கீஸ்வரர் உடனுறை புஷ்பகுஜாம்பாள் ஆலயமே, இந்த நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும். ஜென்ம நட்சத்திரத்தில் மூல நட்சத்திரக்காரர்கள் இந்த ஆலயத்தில் வழிபடுவது நல்லது.

மூல நட்சத்திரக்காரர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள எருமை தானம் செய்வது நல்லது.