அனுஷ நட்சத்திர பலன்கள்

தடை கற்களை எல்லாம் போராடி படிக்கற்களாக மாற்றும் ஆற்றல் நிறைந்தவர்கள் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

தோஷம் இல்லாத நட்சத்திரங்கள் ஒன்று என்ற சிறப்பை பெற்றது மகா நட்சத்திரங்களில் ஒன்றான அனுஷம். ந, நி, நு, நே என்ற எழுத்துக்கள் பெயரின் முதல் எழுத்துக்களாக வருபவர்களும் அனுஷ நட்சத்திர ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.

சனி பகவானின் நட்சத்திரமான அனுஷம் செவ்வாய்க்கு உரிய விருச்சிக ராசியில் இடம்பெற்றுள்ளதால், வீரம். விவேகம், விடாமுயற்சி, உறுதி ஆகிய தன்மை இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலவித தடைகளை வாழ்க்கையில் சந்திக்க வேண்டி வரும். ஆனால், அவற்றை சாதுரியமாக சமாளிக்கும் ஆற்றலும் இவர்களிடம் நிறைந்திருக்கும்.

முகத்தில் அவ்வப்போது கவலை ரேகைகள் படர்ந்திருக்கும். மன அமைதியை பாதிக்கும் விஷயங்களை இவர்கள் அடிக்கடி யோசித்துக் கொண்டே இருப்பார்கள். பழி வாங்கும் குணமும் அவ்வப்போது தலை தூக்கும்.

இவர்கள் கடின உழைப்பாளிகள். எடுத்துக்கொண்ட  வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பார்கள். எத்தனை தடைகள் வந்தாலும், அதனை எதிர்கொண்டு முன்னேறுவதே இவர்களது லட்சியம். இறுதியில் முன்னேற்றத்தை சந்திப்பார்கள்.

இவர்களுக்கு நிரந்தரமான உறவுகள், நண்பர்கள், ஆதரவுகள் கிடையாது. ஆனாலும், என்வழி தனி வழி என்று தனித்து நின்று வெற்றி அடைவார்கள்.

மறை பொருளை தேடுவது, ஆய்வு செய்வது போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இவர்கள், அதில் வெற்றியும் காண்பார்கள்.

மற்றவர்களின் மன ஆழத்தை இவர்களால் கண்டு பிடிக்க முடியம். ஆனால், இவர்கள் மனதில் உள்ளதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் வசீகர தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கர்வம், அந்தஸ்து இல்லாத எளிமையான வாழ்க்கையை விரும்புவார்கள், மற்றவர்களோடு ஒத்துப்போகும் தன்மையும், மற்றவர்களை வழி நடத்தும் குணமும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

அனுஷ நட்சத்திரத்தில் நின்ற கிரகம், மருத்துவ குணம், புத்திர தோஷம், சொந்த தொழில் செய்யும் எண்ணம் ஆகியவற்றை குறிக்கும்.

அனுஷ நட்சத்திரத்தின் அதிதேவதை ஸ்ரீ லக்ஷ்மி மற்றும் லக்ஷ்மி நாராயணர். பரிகார தெய்வம் துர்கை மற்றும் காளி. எட்டுக்குடி வன்மீகர் ஜீவ சமாதியையும் வழிபடலாம். உகந்த மலர் செம்முல்லை.

அனுஷ நட்சத்திரம் குடை, தாமரை, வளைந்த வில் போன்ற வடிவம் கொண்டுள்ளதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தொழில் வணிகத்திற்கு இவற்றை லோகோவாக பயன்படுத்தலாம்.

தேவ கணம் கொண்ட நட்சத்திரமான அனுஷத்தின் விருட்சம் மகிழ மரம். எனவே அனுஷ நட்சத்திர காரர்கள், மகிழ மரத்திற்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பது நல்லது.

அனுஷ நட்சத்தின் மிருகம் பெண் மான். பறவை வானம்பாடி. எனவே இவற்றுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது.

மயிலாடுதுறை அருகே திருநன்றியூரில் அமைந்துள்ள மகாலக்ஷ்மிபுரீஸ்வரர் உடனுறை உலகநாயகி அம்மன் ஆலயமே, அனுஷ நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும்.

எனவே, ஜென்ம நட்சத்திர தினத்தன்று, அனுஷ நட்சத்திரகாரர்கள், இந்த ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நல்லது.

அனுஷ நட்சத்திர காரர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள வஸ்திரதானம் செய்வது சிறப்பு.