தளபதியாய் வலம் வரும் மேஷம்

ராசி மண்டலத்தின் முதல் ராசி மேஷ ராசி. எங்கும் எதிலும் முதன்மையை திகழ்வதே மேஷ ராசியின் அடிப்படை குணம்.

அசுவணி மற்றும் பரணி நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள், கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் மேஷ ராசியை சேர்ந்தவர்கள்.

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் என்றால் நெருப்பு, ரத்தம், போர், விளையாட்டு, சாகசம், தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வீடு, மனை, வெடி பொருட்கள் போன்றவற்றை குறிப்பதால், இந்த துறைகளில் அதிக ஆதிக்கம் செலுத்துபவர்கள் மேஷ ராசிக்காரர்களே.

மேஷ ராசியின் அடையாளமாக விளங்குவது ஆட்டு கிடாய். சண்டை என வந்து விட்டால், கொம்பு உடைந்தாலும் பின்வாங்காமல் சண்டை பிடிப்பது ஆட்டு கிடாயின் குணம். அதனால், பெரும்பாலான மேஷ ராசிக்காரர்கள், குறிப்பாக செவ்வாய் வலுத்த மேஷ ராசிக்காரர்கள், முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள்.

நவக்கிரகங்களின் தலையாய கிரகமான சூரியன், மேஷ ராசியில் உச்சம் பெறுவதால், இவர்களின் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை பற்றி அதிகம் சொல்ல தேவை இல்லை.

செவ்வாய் வலுவாக உள்ள மேஷ ராசி மற்றும் மேஷ லக்கின கார்ரர்கள், ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை, அறுவை சிகிச்சை போன்றவற்றில் முதன்மையாக திகழ்வார்கள்.

தரிசு நிலங்கள், உழுத நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், பராமரிப்பு இல்லாத வீடுகள் – கட்டிடங்கள், தொழிற்சாலைகள், செம்மண் பூமி, கட்டுமான பொருட்கள், அரசுக்கு சொந்தமான நிலங்கள் – குடியிருப்புகள் போன்றவை மேஷத்தின் அடையாளங்களாக கூறப்படுகின்றன.

மேஷ ராசிக்காரர்கள் மெலிந்த தேகத்துடன், சுறுசுறுப்பாகவும், படபடப்பாகவும் இருப்பார்கள். உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுவார்கள். தலைவலி போன்ற பாதிப்புகளும் உண்டு. அடிக்கடி உணர்ச்சிவசப்படுவார்கள்.

சூடான உணவுகள் இவர்களுக்கு பிடிக்கும். ஆனால் குறைவான அளவே உட்கொள்வார்கள். அடிக்கடி கோபப்படுவதும், உடனுக்குடன் சாந்தமாவதும் இவர்களின் குணம்.

இது சர ராசியாக இருப்பதால், ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலையை விட அலைந்து திரிந்து செய்யும் வேலை இவர்களுக்கு பிடிக்கும்.

எளிதில் உணர்ச்சி வசப்படுதல், காதல் வயப்படுதல் என மேஷ ராசிக்காரர்கள் இருந்தாலும், வளைந்து நெளிந்து செல்வதும், நீக்கு போக்காக நடந்து கொள்வதும் இவர்களுக்கு அவ்வளவாக சாத்தியம் இல்லை.

இவர்களிடம் வேலையை ஒப்படைத்து விட்டு ஒதுங்கி விட்டால், அதை கண்ணும் கருத்துமாக விரைவாக முடித்து விடுவார்கள். அடிக்கடி குறுக்கிட்டால் வேலை நடக்காது.

மேஷ லக்னம் மற்றும் மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் வலுவாக இருந்தால், இவர்களை அடக்கி ஆளுவது கடினம். எளிதில் மற்றவர்கள் இவர்கள் அடக்கி ஆளுவார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் எதையும் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். கடன், வழக்கும், எதிரி என அனைத்தையும் சந்திக்க நேர்ந்தாலும், இறுதியில் இவர்கள் வெற்றி காண்பது உறுதி.

பணம் மற்றும் குடும்ப நிலை இவர்களுக்கு பெரிய அளவில் திருப்தியாக அமைவதில்லை. என்றாலும் அதற்காக கவலைப்படாமல், விடாமுயற்சியுடன் அதில் இவர்கள் வெற்றி காண முயன்று சாதிப்பார்கள். பல வீட்டில் மனைவியின் நிர்வாகமே இருக்கும்.

சகோதர உறவுகள், மாமன் மைத்துனர் உறவுகள் போன்ற எந்த உறவுகளும் இவர்களுக்கு சரியாக அமைவதில்லை. அமைந்தாலும் அதனால் பெரிய அளவில் பயன் இருப்பதில்லை. ஆனாலும், இவர்கள் தனிக்காட்டு ராஜாவாகவே வலம் வருவார்கள்.

நான்காம் அதிபதி சந்திரன், லக்னாதிபதிக்கு நட்பு கிரகம் என்பதால், அவர்  நல்ல நிலையில் இருந்தால், வீடு, மனை, வாகனம்,தாயாரின் அன்பு, நல்ல கல்வி போன்ற அனைத்தையம் பூரணமாக பெறுவார்.

நல்ல பூர்வீகம் இருக்கும். நல்ல குழந்தைகளும் அமையும். பாக்கிய ஸ்தானம் நன்கு அமையப்பெற்றவர்கள், உயர் பதவி, நல்ல வருவாய், வெளிநாடு, சுற்றுலா என அனைத்தையும் அடையும் பாக்கியம் பெறுகின்றனர்.

தொழிலுக்கும், வருவாய்க்கும் பாதிப்பு இல்லாத வரை மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் தளபதியாகவே வலம் வருவார்கள். முன்னேற்றத்தை சந்திக்கும் பெரும்பாலான மேஷ ராசிக்காரர்கள், யாருடைய ஆதரவும், தாக்கமும் இல்லாமல் உயர்ந்த சுயம்புவாகவே இருப்பார்கள்.

 தடைகள் அகல – அதிர்ஷ்டம் பெருக

மேஷ ராசிக்கு சூரியனும், குருவும் சுபர்களாக இருப்பதால், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற துணிகள் கைக்குட்டைகளை பயன்படுத்துவது முன்னேற்றத்தை தரும்.

புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் அசுபர்கள் என்பதால், பச்சை, வெள்ளை, நீல நிற ரிப்பன்களை முறையே புதன், வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் கத்தரி கோலால் சிறு சிறு துண்டுகளாக வெட்டி போடுவது நல்லது.

அதிர்ஷ்டத்தை மேலும் பெருக்கிக்கொள்ள எந்த பொருளையும் இலவசமாக வாங்காமல், அதற்காக சிறு தொகையாவது கொடுத்து வாங்க வேண்டும் என்று லால் கிதாப் கூறுகிறது.

மேலும், இனிப்பு பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளில் வேலை செய்வதை தவிக்கவும். வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்க கூடாது.

இரவு உறங்கும்போது, தலைமாட்டில் ஒரு சொம்பு நிறைய தண்ணீரை வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் காலை அந்த நீரை ஏதாவது ஒரு செடிக்கு ஊற்றி வர நல்லது.

இவை அனைத்தும் மேஷ ராசிக்கான பொதுவான பலன்களே. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

என்ன நண்பர்களே, இது போல மற்ற ராசிகளுக்கான பலன்களையும் காண Virgo News இணைய தளத்தை பாருங்கள்.  இந்த பலன்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் Virgo News பக்கத்தை லைக் பண்ணுங்கள், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்கள். நன்றி. வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *